Published : 03 Feb 2020 09:13 AM
Last Updated : 03 Feb 2020 09:13 AM

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சியினர் கையெழுத்து இயக்கம்: சென்னையில் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணு தொடங்கி வைத்தனர்

குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சைதாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு ஆகியோர் இதை நேற்று தொடங்கி வைத்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம், கடந்த 24-ம் தேதி நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் பிப்ரவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, சென்னை கொளத்தூரில் கையெழுத்து இயக்கத்தைதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதற்காக உருவாக்கப்பட்ட படிவத்தில் முதலாவதாக மு.க.ஸ்டாலின் தனது கையெழுத்தை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து கொளத்தூரில் மக்களிடம் வீடு வீடாகச் சென்று கையெழுத்து பெற்றார். மேலும், குடியுரிமைச் சட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களிடம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பல்வேறு இடங்களில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். சென்னை சைதாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்து பேசும்போது, ‘‘குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடுமுறையை கைவிடக் கோரியும் மாணவர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

13 மாநிலங்களில்..

இதுவரை 13 மாநிலங்களில் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. பாஜக ஆட்சி செய்யும் சில மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, இதை மத்திய அரசு கைவிட வேண்டும். எல்ஐசி, வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். எனவே, ஒரு கோடி அல்ல, பல கோடி கையெழுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார். இதில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சென்னை கொண்டிதோப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீடு வீடாகச் சென்று குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து பெற்று, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆவடியில் தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி, சென்னை ராயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், ஆலந்தூர் எம்.கே.என்.சாலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், வேளச்சேரி எல்.பி.சாலையில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, சோழிங்கநல்லூர் பகுதியில்காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு உட்படஉட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர்.

குடியரசு தலைவரிடம்..

இந்த கையெழுத்து இயக்கம் வரும் 8-ம் தேதி வரை நடக்கிறது. ஒரு கோடி கையழுத்து வரை பெறப்பட்டதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சியினரும் குடியரசுத் தலைவரை சந்தித்து கையெழுத்து படிவங்களை வழங்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x