Published : 03 Feb 2020 08:06 AM
Last Updated : 03 Feb 2020 08:06 AM

ஹோட்டல்களில் உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்கள் காட்சிப்படுத்தும் முறை: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

சென்னை

ஹோட்டல்களில் உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்களை காட்சிப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உணவகங்கள், ஹோட்டல்களில் உணவு உண்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. வெளியூர்களுக்கு பயணம் செல்பவர்கள் பெரும்பாலும் ஹோட்டல் உணவை நம்பித்தான் செல்கின்றனர்.

இவ்வாறு, உணவருந்தும் நுகர்வோருக்கு எந்த ஹோட்டல் பாதுகாப்பானது மற்றும் சுகாதாரமானது என்று தெரிவதில்லை. எனவே, சிறிய உணவகங்கள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை அனைத்துக்கும் சுகாதார மதிப்பீடு வழங்கும் முறை உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக, ஹோட்டல்களில் விற்கப்படும் ஒவ்வொரு உணவிலும் எத்தகைய ஊட்டச்சத்துகள் உள்ளன என்பதை நுகர்வோர் பார்வையில் படும்படி காட்சிப்படுத்தும் முறையை நடைமுறைப்படுத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நுகர்வோர் ஹோட்டல்களில் உணவு பொருட்களை விரும்பி உண்ணுகின்றனர். இவ்வாறு, தாங்கள் சாப்பிடும் உணவில் புரதம், கொழுப்பு சத்து உள்ளிட்டவை எத்தகைய அளவில் உள்ளது என்பது தெரிந்து கொள்வதில்லை.

ஒவ்வொரு நுகர்வோரும் உணவை உட்கொள்ளும்போது தாங்கள் உண்ணும் உணவு, எந்த அளவுக்கு தங்களது உடலுக்கு நன்மை பயக்கும் அல்லது தீமை ஏற்படுத்தும் என்பதை அறிய வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு உணவில் உள்ள புரதம், கொழுப்பு, இரும்பு, வைட்டமின்கள், தாதுபொருட்கள் உள்ளிட்ட சத்து வகைகளைப் பிரித்து அவற்றின் சதவீதத்தைக் குறிப்பிட்டு நுகர்வோருக்கு காட்சிப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் அறிமுகம்

இந்தத் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும். அதன் பிறகு, ஹோட்டல்களில் உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்களை நுகர்வோரும் பார்வையிட்டு தங்களது உடல்நலனுக்கு ஏற்ற உணவை உட்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x