

பழநியில் தைப்பூசத் திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிப்ரவரி 8-ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.
பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலுக்கு உட்பட்ட பெரிய நாயகி அம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடக்கமாக கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கொடிமண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார்.
கொடிக் கம்பத்துக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. மயில், வேல் உருவம் பொறித்த மஞ்சள் நிறக் கொடிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது.
இதில் பழநி கோயில் இணைஆணையர் ஜெயச்சந்திரபானுரெட்டி, உதவி ஆணையர் செந்தில் குமார், கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வக்குமார், தொழிலதிபர் ஹரிஹரமுத்து மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணம்
திருவிழா நாட்களில் காமதேனு, வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, தங்கமயில் வாகனங்களில் சுவாமி தினமும் வீதி உலா நடைபெறும். திருவிழாவின் 6-ம் நாளான பிப்ரவரி 7-ம் தேதி இரவு திருக்கல்யாணம், பிப்ரவரி 8-ம் தேதி (சனிக்கிழமை) மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது.
திருவிழாவுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராள மான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு வந்த வண்ணம் உள்ள னர்.