

சீனாவில் இருந்து தமிழகம் வந்த8 சீனர்கள் உட்பட 12 பேர் அரசுமருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 9 பேரின் ரத்தமாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 6 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காய்ச்சல் சீனாவைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சீனாவில் இருந்துகேரள மாநிலம் வந்த 2 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கமத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதன்படி, சீனாவில் இருந்துவருபவர்களுக்கு விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் சென்னை அரசு பொது மருத்துவமனை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த பிரிவு வார்டுகளுக்கென தனியாக டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
சென்னை, திருச்சி விமானநிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடல் வெப்பநிலையை கண்டறிய உதவும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனையும் மற்ற விமான நிலையங்களில் டாக்டர்களைக் கொண்டும் பரிசோதனை செய்யப்படுகிறது.
சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பின் முக்கிய அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சளிதொந்தரவு இருப்பது தெரியவந்தால் அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அரசு மருத்துவமனைகளில் உள்ள தனி வார்டுகளில் அனுமதித்து மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.
மேலும், அவர்களுடன் வருபவர்களும் தொடர்ந்து 28 நாட்களுக்கு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். இதன்படி, சீனாவில் இருந்து தமிழகம் வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பரிசோதனை செய்ததில், சந்தேகத்தின்பேரில் சுமார் 800 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களில் தற்போது 6 பேர் கரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் அளிக்கப்பட்டு வருகின்றனர். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் க.குழந்தைசாமி கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். இதுவரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் 5,443 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்புள்ள சீனா உள்ளிட்டநாடுகளில் இருந்து வந்த 799 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சீனாவில் இருந்து தாம்பரத்தைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஒரு மாணவிமற்றும் 8 சீனர்கள் என மொத்தம் 10 பேர் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இதேபோல், திருச்சியில் ஒருவரும், ராமநாதபுரத்தில் ஒருவரும் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 9 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் 4 மாதிரிகள் புனே ஆய்வுமையத்துக்கும், 5 மாதிரிகள் சென்னை கிண்டியில் உள்ள கிங்இன்ஸ்டிடியூட் ஆய்வு மையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் 48 மணி நேரத்தில் தெரியவரும்.
பரிசோதனைக்கு ரத்த மாதிரிகளை எடுத்ததால், அவர்களுக்கு கரோனா வைரஸ் இருப்பதாக நினைக்க வேண்டாம். அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ள 12 பேருக்கும் கரோனா வைரஸ் இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். சீனாவில் இருந்து வந்ததால் கண்காணித்து வருகிறோம். கிங் இன்ஸ்டிடியூட்டில் தினமும் 60 பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது. மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
முன்னதாக கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வு மையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செயலாளர் பீலா ராஜேஷ், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, சென்னை அரசுபொது மருத்துவமனை டீன்ஜெயந்தி உள்ளிட்ட சுகாதாரத்துறை, மத்திய அரசு மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முகநூலில் வெளியிட்ட வீடியோவில், “கரோனா வைரஸ் குறித்து யாரும் பதட்டமோ, பயமோ பீதியோ அடைய வேண்டாம். இது ஒரு தொற்று நோய். காற்றில் இருமல், தும்மலின் மூலம் பரவும் நோய். நாம் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியப்படுத்தக் கூடாது. பொது இடங்களுக்கு சென்றுவிட்டு வந்தவுடன் கண்டிப்பாக கைகளைகழுவ வேண்டும்.
காய்ச்சல், இருமல், தும்மல் இருப்பவர்களிடம் இருந்து சிறிதுதூரம் இடைவெளிவிட்டு இருக்கவேண்டும். கரோனா வைரஸ் காய்ச்சல் குறித்த மருத்துவ உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் செயல்படும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை 044-29510400, 044-29510500 மற்றும் 94443 40496, 87544 48477 என்ற எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். 104 சேவை மையத்தையும் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் தெரிவித்தார்.