

கரோனா வைரஸ் குறித்து தமிழகத்தில் பொதுமக்களுக்கு பதற்றமோ, பீதியோ, பயமோ வேண்டாம். தேவையில்லாத புரளிகளைப் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சீனாவின் ஹூபி மாநிலத்தில் உள்ள வுஹான் நகரை மையமாக வைத்துப் பரவியுள்ள கரோனா வைரஸுக்கு இதுவரை 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 16 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும், 20 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் படித்து வந்த இந்திய மாணவர்கள், இந்தியர்களை இரு விமானங்கள் மூலம் இந்திய அரசு அழைத்து வந்துள்ளது. ஏறக்குறைய அங்கிருந்து 650 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு டெல்லி அருகே மனேசரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சீனாவில் இருந்து இந்தியா வந்துள்ள மாணவி உள்பட இருவருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு அவர்கள் இருவரும் தீவிரமான மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 1,700 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவிலும் கரோனா வைரஸ் பீதி மெல்லப் பரவியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''கரோனா வைரஸ் குறித்து தமிழகத்தில் பொதுமக்களுக்கு பதற்றமோ, பீதியோ, பயமோ வேண்டாம் என்று நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் இது ஒரு தொற்று நோய். இருமல், தும்மலின் மூலம் காற்றில் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்குப் பரவும் நோய். அதனால் நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியப்படுத்தக் கூடாது. காரணம் அண்டை நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது. தற்போது அண்டை மாநிலத்திலும் ஒருவருக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது.
நமது சுகாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மிகச் சீரிய முறையில் எடுத்து வருகின்றது. சிறப்பு வார்டுகளை சிறப்பாக ஏற்படுத்தி வருகிறோம். கரோனா வைரஸ் பாதிப்பை உறுதிப்படுத்த ரத்த மாதிரிகளை புனேவில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும். அதற்குப் பிறகு தமிழகத்தில் சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும்.
பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தேவை இல்லாத புரளிகளைப் பரப்ப வேண்டாம். பொது இடங்கள், வீடு, கோயில், பேருந்து நிலையம், ஷாப்பிங், மருத்துவமனை என வெளியில் சென்று வந்தால் சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும்.
20 சதவீதம் கரோனோ வைரஸ் நோய் இருமல், தும்மல் மூலமாகப் பரவுகிறது. 80 சதவீதம் ஒருவர் இருமிய, தும்மிய இடத்தைத் தொடும்போது, அந்தப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, நேரடித் தொடர்பு மூலம் பரவுகிறது. இவற்றை நாம் தவிர்க்கலாம். பதற்றமோ, பீதியோ வேண்டாம். அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சீனாவில் இருந்து வருபவர்கள் அனைவரையும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அதனால் சீனாவில் இருந்து வந்தாலே அவர்களுக்கு கரோனா வைரஸ் உள்ளது என்ற பார்வை வேண்டாம்.
இந்த நேரத்தில் சீனா போன்ற நாடுகளுக்குப் பயணம் செல்வதைத் தவிர்க்க வேண்டும்''.
இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.