Published : 02 Feb 2020 07:38 PM
Last Updated : 02 Feb 2020 07:38 PM

மத்திய பட்ஜெட்: வரவேற்பு அம்சங்கள், வேண்டுகோள்கள்: ஓபிஎஸ் பட்டியல் 

சென்னை

மக்களவையில் 2020-2021 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த பட்ஜெட்டுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன் சில வேண்டுகோள்களையும் பட்டியல் இட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:

''இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் வளர்ச்சியை மட்டுமே மையமாக வைத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நேற்று (1-2-2020) தாக்கல் செய்யப்பட்ட 2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை பெரிதும் வரவேற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் நலம் பேணி, அவர்களது தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கையை சிறப்புடன் தயாரித்து அளித்துள்ள மத்திய நிதி அமைச்சரை வெகுவாகப் பாராட்டுகிறேன்.

நாட்டின் முழுமையான வளர்ச்சிக்கு அடிப்படை, பொருளாதார வளர்ச்சியே என்பதால், நிதித் துறை என்பது நம்பகத்தன்மையுடனும், வலிமையாகவும் இருந்திட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த கவனமும், அக்கறையும் நிதி நிலை அறிக்கை முழுவதும் பிரதிபலிக்கும் வகையில் நிதித் துறையில் பல்வேறு முற்போக்கான, நாட்டிற்கு முன்னேற்றம் தரத்தக்க அறிவிப்புகளுடன் மத்திய நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

* நடுத்தர வர்க்கத்தினருக்கு பயன் அளித்து, மக்களிடம் பணப் புழக்கத்திற்கு வழி கோலும் வகையில் வரி விதிப்பில் சீர்திருத்தம்.
* புதுமைத் தொழில் நிறுவனங்களுக்கு வரி விலக்கு சலுகை
* கடன் பத்திர முதலீட்டு வரம்பு உயர்வு
* வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களுக்கும், வங்கி சாரா கடன் நிறுவனங்களுக்கும் கடன் உறுதியளிப்பு.
* ஏற்றுமதி செய்யக்கூடிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், செலுத்தக்கூடிய மின் வரி, மதிப்புக் கூட்டு வரி ஆகியவற்றை திரும்பப் பெற்றிடும் திட்டம்.
* வங்கிகளில் தனியார் மூலதனத்தை அதிகரிக்க நடவடிக்கை
* அரசு சொத்து நிதியங்கள் மேற்கொள்ளும் அடிப்படை கட்டமைப்புத் திட்ட முதலீடுகளுக்கு 100 சதவீத வரி விலக்கு

என நிதிச் செயலகத்தின் அனைத்து முனைகளிலும் ஏற்றம் அளிக்கும் நிதித் துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் இந்த நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இதன் வாயிலாக நாடு வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகின்ற அதே வேளையில், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பதுடன், பணத்தை முதலீடு செய்வதும் பெரிதும் அதிகரிக்கும் .

* மேலும், பதினைந்தாவது நிதிக்குழு மத்திய அரசுக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளின்படி, மத்திய வரித் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் பங்கீட்டின் அளவு தமிழகத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டிற்கு இவ்வகையில் கிடைக்கக்கூடிய பங்கீடு, 4.023 சதவீதத்திலிருந்து 4.189 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* பதினைந்தாவது நிதிக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசால் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் மொத்தப் பங்கு 42 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டிற்கு நிகரமாக 1.8 சதவீதம் கூடுதல் நிதிப் பகிர்வு கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதுதவிர, வருவாய்ப் பற்றாக்குறை சிறப்பு மானியம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டுமென பதினைந்தாவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் 1,600 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த நிதி நிலை அறிக்கை, வேளாண்மைக்கு மிகப் பெரும் முக்கியத்துவம் கொடுத்து, விவசாய தொழில் வளர்ச்சிக்கும், விவசாயப் பெருங்குடி மக்களின் உயர்விற்கும் மிகச் சிறப்பான அடித்தளத்தை அமைத்துள்ளது.
* விவசாயத் துறைக்கு 2.83 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு
* 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார் பம்ப் செட்டுகள்
* வேளாண் பொருட்களை விமானம் மூலம் கொண்டு செல்ல 'கிருஷி உடான்' திட்டம், ரயில் மூலம் கொண்டு செல்ல, 'கிசான் ரயில்' சேவை

என வேளாண்மை தொழில் சிறக்க அறிவிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு அறிவிப்பிற்கும் வேளாண் சமூகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மக்கள் சமுதாயமே நன்றி பாராட்டிக் கொண்டிருக்கிறது.

* மத்திய அரசில் உள்ள அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணியிடங்களை நிரப்பிட, தேசிய ஆட்சேர்ப்பு முகமை ஒன்றைத் தொடங்கி, இணையவழி மூலமாக பொதுவான தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பின் மூலமாக, வேலை நாடும் படித்த இளைஞர்கள் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுதவேண்டிய சிரமம் நீக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் கீழ் தமிழக மாணவர்கள் முழுமையாகப் பயனடைய, இத்தேர்வுகள் தமிழிலும் மற்றும் அந்தந்த மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்கித் தந்திட இந்த நிதி நிலை அறிக்கையில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளமைக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

* ஜவுளித் துறையில் நாட்டிலேயே முதல் நிலையில் இருந்துவரும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் புதிய தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் பெரிய உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கிறோம். இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் பெரும் பயன் பெறும் .

* நான்கு சிறப்புமிக்க அருங்காட்சியகங்களை உலகத் தரமாக்கும் வகையில் மேம்படுத்த வேண்டும் என நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொன்மையும், வரலாற்றுப் பெருமையும்மிக்க சென்னை அருங்காட்சியகத்தையும் இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு கருத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

* சுற்றுலாத் துறைக்கு மேலும் உந்துதல் அளிப்பதற்காக மத்திய அரசு 2500 கோடி ரூபாய் செலவில் மாநில அரசுகளுக்கு மானியம் வழங்குவதற்காக ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ஒரு முழுமையான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் திட்ட அறிக்கை பரிசீலிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

* பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு மாசற்ற சுகாதாரமான நிலையை கொண்டுவர வேண்டும் என மத்திய அரசு
4000 கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. நாட்டிலேயே அதிக அளவில் நகர மேம்பாடு கொண்ட மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற மாநகரங்களும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும்.

* அனைவருக்குமான வீட்டு வசதித் திட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் 1.5 லட்சம் ரூபாய் அளவிற்கான கூடுதல் வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது. இது பொருளாதார அளவில் நடுத்தர குடும்பங்களுக்கு வீட்டுவசதி பெறுவதில் பேருதவியாக அமைவதோடு, வீட்டுவசதித் துறைக்கு பேராதரவாகவும் அமையும்.

* மானுட வாழ்வின் நுட்பங்கள் அனைத்தும் கற்றுத் தேர்ந்து, அவற்றைச் செயல்படுத்தி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். தமிழினத்தின் இந்தப் பெரும் சிறப்புக்கு பண்டைத் தமிழ் இலக்கியங்களே சான்று பகர்கின்றன. தமிழ் இலக்கியம், மக்கள் வாழ்வியல் நுட்பங்கள் அனைத்திற்கும் பொருத்தமான பாடல்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் இவற்றைப் படித்து, மக்கள் நலம் காத்து முறையாக அரசாட்சி நடத்தும் ஆர்வமும், முனைப்பும் கொண்டு கடமை ஆற்றிட வேண்டும் என்பதற்காகவே தமிழ்ச் சான்றோர்கள் இதனைப் படைத்திருக்கிறார்கள்.

இதனை இந்தியத் திருநாட்டிற்கு எடுத்துக்காட்டும் வகையில், கடந்த ஆண்டு மத்திய நிதி நிலை அறிக்கையில், எப்படி வரி விதிக்கப்பட வேண்டும் என்பதற்குப் புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி உரையாற்றிய நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு, வேளாண்மை குறித்தும், நாட்டில் நிறைந்திருக்க வேண்டிய வளங்கள் குறித்தும், ஔவையாரின் ஆத்திச்சூடியையும், தெய்வப் புலவர் திருவள்ளுவரின் திருக்குறளையும் மேற்கோள் காட்டி உரையாற்றியுள்ளதற்கு தமிழ் இனமே பெருமை கொள்கிறது. அதற்காக அவருக்கு எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

* மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல் பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் இந்த நிதிநிலை அறிக்கை திறம்படத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி நிலை அறிக்கை ஒரு துறை சார்ந்த அறிக்கையாக இல்லாமல் வேளாண் சார்ந்த, கல்வி சார்ந்த, தொழில் சார்ந்த, சுகாதாரம் சார்ந்த, என ஒவ்வொரு துறையும் தங்கள் துறை சார்ந்த நிதி நிலை அறிக்கை என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் வகையில் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகள், மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்வதோடு மட்டுமன்றி, எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையிலும் அமைந்துள்ளன.

* G-20 மாநாட்டின் தலைமை பொறுப்பு 2022 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் செய்தியாகும். இதற்காக மத்திய அரசிற்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கின்ற அதே வேளையில், இதுகுறித்து நடத்தப் பெற உள்ள முக்கிய நிகழ்வுகளில் இரண்டு நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நான் மேற்குறிப்பிட்டவாறு, தமிழகத்திற்கும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி, மிகச் சீருடன் இந்த நிதிநிலை அறிக்கையை தயாரித்திட வழிகாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், சிறப்பான முறையில் நிதி நிலை அறிக்கையை அளித்த மத்திய நிதியமைச்சருக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x