Published : 02 Feb 2020 06:43 PM
Last Updated : 02 Feb 2020 06:43 PM

மதச்சார்பின்மை உறுதிமொழியை மீறும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ 

மதச்சார்பின்மை உறுதிமொழியை மீறும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது;

''தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ச்சியாக மத வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சுகளையும், கருத்துகளையும் பேசி வருகின்றார். அரசியல் அமைப்புச் சட்டத்தின்பால் உறுதிமொழி ஏற்ற ஒரு அமைச்சர் அனைவருக்கும் பொதுவானவர். ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ச்சியாக குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராக, தான் ஏற்றுக்கொண்ட மதச்சார்பின்மை உறுதிமொழிக்கு எதிராகப் பேசி வருவதோடு, வன்முறையைத் தூண்டும் படியான கருத்துகளையும் பேசி வருகின்றார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜனநாயக ரீதியான போராட்டங்களை மதவாதப் போராட்டமாகச் சித்தரித்து மக்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டுவதும், திருப்பி அடிப்பேன், துப்பாக்கியால் சுடுவேன் என மிரட்டுவதும், ரத்தக் களரியாக மாறட்டும் மாறினால்தான் தமிழகத்துக்கு நல்லது என பேசுவதும், சொந்தக் கட்சி ஆளும் அரசின் சட்டம் ஒழுங்கு அறிக்கைக்கு மாறாகப் பேசுவதும் என்பது இயல்பான பேச்சின் வெளிப்பாடாக கருத முடியாது. அது மிக ஆபத்தான எண்ணம் கொண்ட மிக மோசமான வெறுப்புணர்வு கொண்ட பேச்சாகவே பார்க்க வேண்டும்.

வன்முறையைத் தூண்டும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை பொதுக்கூட்ட மேடைகளில், ஊடகங்களில் பேசுவது எவ்வளவு ஆபத்தானது. ஆனால், ராஜேந்திர பாலாஜி ஒரு அமைச்சராக இருந்துகொண்டே வன்முறையை ஏவும்படியான பேச்சுகளைப் பேசி வருகின்றார். அனைவருக்கும் பொதுவான அமைச்சராக இருப்பவர்கள் அரைப்புள்ளிக்குக் கூட அர்த்தம் உணர்ந்து பேச வேண்டும். ஆனால், ராஜேந்திர பாலாஜி அதனைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து வெறுப்புணர்வுப் பேச்சுகளைப் பேசி வருகின்றார். அமைச்சரின் பேச்சு பாஜவினரை சந்தோசப்படுத்தியிருக்கலாம், ஆனால் தமிழக மக்கள் அதனை ஒருபோதும் விரும்புவதில்லை. இத்தகைய மோசமான போக்கை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எப்படி அனுமதிக்கிறது என்ற கேள்வி எழுகின்றது.

ஆளுமைத்திறன் என்பது ஆட்சியைத் தக்கவைப்பது மாத்திரமல்ல; தனது அமைச்சரவை சார்ந்த அமைச்சர்களையும் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதுதான் என்பதை தமிழக முதல்வரும், அதிமுக தலைமையும் உணர்ந்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆகவே, தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்க முயலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும்''.

இவ்வாறு நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில் திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு கொலை குறித்து அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

பேட்டியில் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்து:

''விஜயரகு கொலை செய்யப்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், கொலை செய்யப்பட்ட விதம் மதரீதியானதுதான். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்படவில்லை. அது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை. இப்படியே போனால், இந்துக்களைக் கொல்லும் வேலையைத் தொடர்ந்தால், அதற்கு திமுக போன்ற கட்சிகள் ஒத்துழைத்தால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. ஒரு சாரர் தப்பு செய்தால் கண்டிப்பதும், ஒரு சாரர் தப்பு செய்தால் அதைக் கண்டும் காணாமல் இருப்பதும் திமுகவின் வாடிக்கையாக உள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில அரசியல் இயக்கங்கள் தொடர்ந்து இதைக் கையில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது''.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் அவரைப் பதவி நீக்கம் செய்யுமாறு கூறியுள்ளார். இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x