

அரசியல் வியூகத்தில், தேர்தல் வேலையில் திறம்படச் செயல்படும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் திமுக கை கோத்துள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்த ஒப்பந்தம் நடந்துள்ளது. இதை ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி என இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்ற ஆட்சி மாற்றங்களுக்குக் காரணமாக இருந்தவர் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர். தற்போது கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கும் அரசியல் ஆலோசகராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுகவுடன் இணைந்து பணியாற்ற பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 13 இடங்களில் மட்டுமே வென்றது. இந்த சூழலில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சில வியூகங்களை வகுக்க திமுக முடிவெடுத்தது.
அதனடிப்படையில் அரசியல் திட்டமிடலில் சிறந்து விளங்கும் பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக நியமிக்க அவர் நடத்தி வரும் ஐ-பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய திமுக முடிவெடுத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் திமுக தலைவர் ஸ்டாலினை பிரசாந்த் கிஷோர் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வியூகம், ஒட்டுமொத்த மக்களுக்கும் திமுகவைக் கொண்டு சேர்ப்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் மக்களிடம் திமுகவின் செல்வாக்கைப் பலப்படுத்தும் வகையில் ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதை திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவு:
தமிழகம் இழந்த புகழை மீட்கும் நம் குறிக்கோள் வெற்றி பெறவும், அதற்கான திட்டமிடலில் உதவிடவும், திறமைமிக்க, ஒத்த கருத்துடைய பல தமிழக இளைஞர்கள், IPAC- அமைப்பின் கீழ், நம்முடன் 2021 தேர்தலில் இணைந்து பணியாற்றிட இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.