

மத்திய பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கை:
''மக்களின் அதிகரித்து வரும் மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ப மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை. வெறும் ரூ 69,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தனியாருடன் இணைந்து 2000 மருத்துவமனைகள் தொடங்கப்படும். மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தனியார் நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதிப்படும் என அறிவித்திருப்பது ஏழை எளிய மக்களைப் பாதிக்கும். அரசு மருத்துவமனைகளில் கிடைத்து வரும் இலவச மருத்துவச் சேவையை ஒழித்துக் கட்டிவிடும்.
மேலும், இத்தகைய மருத்துவமனைகளைத் தொடங்கிட, மருத்துவ உபகரணங்கள் மீது கூடுதல் நலவரி (Health Cess) விதிக்கப்படும் என்பது பொதுமக்களை மிகவும் பாதிக்கும். நிதிச் சுமையை மக்கள் தலையிலேயே ஏற்றும் மோசமான நடவடிக்கையாகும். இதனால், மருத்துவ சிகிச்சைகளுக்கான கட்டணங்கள் அதகரித்துவிடும்.
தனியார் மருத்துவ மனைகளை அதிகரிப்பதன் மூலம், உலகிலேயே மிக அதிகமாக தனியார் மயமாக்கப்பட்ட இந்திய மருத்துவத் துறை மேலும் தனியார் மயமாகிவிடும். எனவே, இந்தத் திட்டத்தக் கைவிட வேண்டும். மத்திய மாநில அரசுகளே நிதி ஒதுக்கீடு செய்து ,நேரடியாக மருத்துவமனைகளையும், மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்கிட வேண்டும்.
மத்திய அரசின்,"மக்கள் மருந்தகங்கள்", 2024 ஆம் ஆண்டுக்குள், அனைத்து மாவட்டங்களிலும் விரிவு படுத்தப்படும் என நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது வரவேற்புக்குரியது. ஆனால், மக்கள் மருந்தகங்களை அரசு மருத்துவமனைகளின் உள்ளே தொடங்குவது சரியல்ல. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்துகள் வழங்குவதை நிறுத்தி வருவது சரியல்ல. இது ஏழை மக்களைப் பாதிக்கும்.
அரசு மருத்துவமனைகளில் இலவச மருந்துகள், தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் மருந்துகள் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்த வேண்டும்.
பொதுத் துறை மருந்து உற்பத்தி நிறுவனங்களையும், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களையும் மூடும் முயற்சியைக் கைவிட வேண்டும். பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம், மருத்துவக் காப்பீடு அடிப்படையில் ,மருத்துவத் துறையை மாற்றுவது நாட்டு நலனுக்கு நல்லதல்ல. அதற்கு மாறாக, பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டும்.
கரோனா வைரஸ் நோய் உள்ளிட்ட புதுவகை நோய்கள் பரவும் நிலையில், அவற்றை உடனடியாக கண்டறிந்து உறுதி செய்ய உதவிடும் வகையில், அனைத்து மாநிலங்களிலும் வைராலஜி லேப்களை உருவாக்க வேண்டும்.
நவீன அறிவியல் மருத்துவத் துறையில் நாடு மேலும் முன்னேற, ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். பாதுகாப்பான குடிநீர்,கழிப்பிட வசதிகள்,சுகாதாரமான வாழ்விடங்கள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் நல்வாழ்வுத் துறையை ஒத்திசைவு பட்டியலுக்கு (Concurrent list)மாற்றக் கூடாது. மாநிலப் பட்டியலிலேயே நீடிக்க வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை ,விரைவில் நடைமுறை படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. இது கல்வியை முற்றிலும் கார்ப்பரேட் மயமாக்கிவிடும். குலக் கல்வி முறையையும், சாதி அடிப்படையிலான பரம்பரைத் தொழிலையும் ஊக்கப்படுத்தும் சமூக நீதிக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்தக் கூடாது''.
இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.