Published : 02 Feb 2020 02:58 PM
Last Updated : 02 Feb 2020 02:58 PM

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு; குடியரசுத் தலைவரிடம் ஒரு கோடி கையெழுத்துப் பிரதிகள் வழங்கப்படும்: ஸ்டாலின்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கப் பிரதிகள் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஒருகோடி கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இன்று கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் இணைந்து மாபெரும் கையெழுத்து இயக்கத்தை இன்று தொடங்கி இருக்கிறோம்.

இந்தப் பயணம் வரும் 8-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தக் கையெழுத்து இயக்கம் ஏன், எதற்காக, எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டிருக்கிறது என்று உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

நேற்றைய தினம் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்திருக்கிறார். அந்த நிதிநிலை அறிக்கையில் நாட்டு மக்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்குப் பயன்படும் வகையில் எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.

பெரும் பணக்காரர்களுக்கு, மிட்டா மிராசுதார்களுக்கு, கோடீஸ்வரர்களுக்குப் பயன்படும் வகையில்தான் மத்திய அரசு அறிவித்திருக்கும் பட்ஜெட் அமைந்திருக்கிறது. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமானக் கணக்கை தாக்கல் செய்வது போல மத்திய நிதியமைச்சர் அந்த பட்ஜெட்டை படித்திருக்கிறார். ஏறக்குறைய 3 மணிநேரம் அவரால் வாசிக்கப்பட்ட அந்த பட்ஜெட், மக்களுக்கு பயன்படும் வகையில் இல்லை. பொருளாதாரத்தை முன்னேற்ற அதில் எந்தத் திட்டமும் இல்லை. வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதற்கான எந்தக் குறிக்கோளும் அதில் இல்லை. அரசு நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடிய வகையில்தான் அந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

இத்தகைய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு கொடுமையான சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. அதுதான் குடியுரிமைத் திருத்தச் சட்டம். சிறுபான்மைச் சமுதாயத்தை சேர்ந்த இஸ்லாமிய மக்கள், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தமிழ் மக்கள் ஆகியோருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள். இதனை எதிர்த்து திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை எதிர்த்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும், பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகளும் வாக்களித்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுக உறுப்பினர்கள் 11 பேர், அந்தக் கூட்டணியில் இருக்கும் பாமக உறுப்பினர் ஒருவர் என 12 உறுப்பினர்களும், அந்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாநிலங்களவையில் வாக்களித்தனர். அதனால்தான் அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இவர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்தக் குடியுரிமைத் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருக்க முடியாது.

எனவே, நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கலவரத்திற்கு, அக்கிரமத்திற்கு, துப்பாக்கிச் சூட்டிற்கு, தடியடிக்கு, பேரணிக்குக் காரணம், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுகவும், பாமகவும்தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்தச் சட்டத்தைத் தொடர்ந்து நாம் கண்டித்துக் கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றிருக்கிறோம். வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது போலவே, தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகிய பணிகளையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.

நம்முடைய பிறந்த தேதியே நமக்கு சில நேரங்களில் குழப்பமாக இருக்கிறது. இந்நிலையில். நம்முடைய தந்தை, தந்தையைப் பெற்ற தந்தை என முந்தைய தலைமுறையினரின் குடியுரிமை பற்றிய விவரங்கள் வேண்டும் என்று கேட்கும் நிலை இந்தச் சட்டங்களின் மூலம் வந்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இந்தக் கணக்கெடுப்புகளை நடத்தக்கூடாது என்று நாம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய அரசு இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.

இந்தச் சட்டத்தை நிறைவேற்றியே தீர்வோம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்கிறார். பிரதமரும் அதையே சொல்கிறார்.

இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் சில கட்சிகள் அதாவது பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் முதலில் ஆதரித்தன. அப்போது ஆதரித்தாலும், தற்போது அவர்களும் எதிர்க்கிறார்கள். பஞ்சாப் எதிர்க்கத் தொடங்கியுள்ளது. நிதிஷ்குமார் எதிர்க்கத் தொடங்கி இருக்கிறார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தங்கள் மாநிலத்தில் அனுமதிக்கமாட்டோம் என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கிறார்.

கேரள மாநிலத்தில், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தாலும் - இரண்டும் அரசியலில் எதிரெதிர் நிலையில் உள்ள கட்சிகளாக இருந்தாலும் – கொள்கை அளவில் இந்தப் பிரச்சினையில் ஒன்று சேர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ஆனால், நம்முடைய சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கடந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானே ஒரு தனிநபர் தீர்மானத்தைக் கொண்டு வந்தேன். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்ற 5 நாட்களும் வலியுறுத்தினேன். ஆனால் இந்த ஆட்சி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அது ஆய்வில் இருப்பதாக சபாநாயகர் தினமும் கூறி என்னை ஏமாற்றினாரே தவிர, அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம், அதை ஏற்றுக்கொண்டால் இந்த ஆட்சி இங்கு இருக்காது.

ஆட்சி இருக்காது என்பது மட்டும் அல்ல; ஆட்சியில் இருப்பவர்கள் வெளியில் நடமாட முடியாது. சிறையில் தான் இருக்க வேண்டும். தாங்கள் சிறைக்குச் செல்லக்கூடாது, ஊழல் வழக்கில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கொடுமையான சட்டத்தைத் தமிழகத்தில் உள்ள இந்த ஆட்சியாளர்கள் ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவற்றை எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக, திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இந்தக் கையெழுத்து இயக்கத்தை தொடங்க முடிவெடுத்தோம். மறியல், பேரணி, ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் எனப் பல வடிவங்களில் நம்முடைய எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறோம்.

தற்போது, வீடு வீடாகச் சென்று, மக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களிடம் எதற்காக இந்தக் கையெழுத்து வாங்குகிறோம் என்று எடுத்துச் சொல்லி, அதற்குப் பிறகு அவர்களிடம் கையெழுத்தைப் பெறும் இந்த இயக்கத்தை இன்று தொடங்கி இருக்கிறோம்.

பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியுள்ள இந்தப் பயணத்தை வரும் 8-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளோம். இன்று கொளத்தூரில் இந்தக் கையெழுத்து இயக்கத்தை நான் தொடங்கி வைத்துள்ளேன். அனைத்துத் தோழமைக் கட்சி நிர்வாகிகளும் வந்துள்ளனர். இதேபோல், ஒவ்வொரு தொகுதியிலும் இன்று முதல் இந்தப் பணியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சியினர் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். 9 அல்லது 10-ம் தேதி இந்தக் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் நண்பர்கள், அதனை நிறைவு செய்து தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க இருக்கிறார்கள்.

அதன் பின்னர் நாட்டின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படும் இந்தியக் குடியரசுத் தலைவரை, மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் நேரடியாகச் சந்தித்து அதனை வழங்க இருக்கின்றனர். அதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு ஒரு விடிவுகாலம் வரும். ‘குடியுரிமைச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். மக்களைக் கணக்கெடுக்கும் அந்தப் பணியை நிறுத்திடவேண்டும். தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுப் பணியை நடத்தக்கூடாது’ என்று வலியுறுத்தி நடைபெறும் இந்தக் கையெழுத்து இயக்கம் வெற்றி பெறும்.

அதற்கான இந்தப் பயணம் வெற்றிப் பயணமாக அமையும்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x