

திருநங்கைகளின் பொருளாதார முன்னேற்றத்தைக் கவனத்தில் கொண்டு அவர்களின் சுயதொழில் முன்னேற்றத்துக்காக சென்னை மாநகர காவல்துறை சார்பில் ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
திருநங்கைகளுக்கான சுயதொழில் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திருவல்லிக்கேணி மாவட்டத் துணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. துணை ஆணையர் தர்மராஜன் ஐபிஎஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் "BORN TO WIN" அமைப்பின் கௌரவத் தலைவர் திருநங்கை அருணா, துணை இயக்குனர் திருநங்கை கிரேஸ் பானு, ஒருங்கிணைப்பாளர் திருநங்கை சுபிக்ஷா, அலுவலக உதவியாளர் திருநங்கை ரேணு, திருநங்கை வேல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மூத்த திருநங்கை வேல்விழி சுயதொழில் தொடங்குவதற்காக அவருக்கு ரூபாய் 10 ஆயிரம் நிதி உதவியை காவல் துறை சார்பாக துணை ஆணையர் வழங்கினார். மேலும், "BORN TO WIN" அமைப்பால் நடத்தப்படும் தையல் பயிற்சி, டிடிபி சென்டர், மற்றும் அழகுக்கலை பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவியையும் காவல் துணை ஆணையர் தர்மராஜன் வழங்கினார். திருநங்கைகளின் சுயதொழில் முன்னேற்றத்துக்கான பல்வேறு உதவிகளை காவல் இணை ஆணையர் சுதாகர் செய்து வருகிறார்.
இதில் F-5 சூளைமேடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு மற்றும் உதவி ஆய்வாளர் ஜான்சிராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.