

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தலைமறைவு தீவிரவாதி அபுபக்கர் சித்திக்கிற்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸ் பக்ருதீன் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் சிபிசிஐடி போலீஸார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இந்து இயக்க பிரமுகர்கள் கொலை வழக்கில் தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை கடந்த ஆண்டு சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள், கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு மே மாதம் வரை குடியாத்தத்தில் வீடு எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, தரணம்பேட்டையில் உள்ள நகைக்கடையில் வேலை செய்த பஞ்சாட்சரம் என்பவரை கொலை செய்து, அவர் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பஞ்சாட்சரம் கொலை வழக்கும் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், பஞ்சாட்சரம் கொலை வழக்கில் தீவிரவாதிகள் மூவரையும் சிபிசிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை முதல் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
பஞ்சாட்சரம் கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் கோவையில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அந்த வாகனத்தை மீட்க பக்ருதீனுடன் சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை அதிகாலை கோவை புறப்பட்டனர். இன்று அல்லது நாளை மீண்டும் பக்ருதீன் வேலூர் அழைத்து வரப்படுவார். மேலும், பக்ருதீன் கூட்டாளிகளுக்கு உதவி செய்த சிலர் குறித்தும், தலைமறைவாக உள்ள அபுபக்கர் சித்திக் குறித்தும் கோவையில் வைத்து விசாரணை நடத்த உள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மே 1-ம் தேதி நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளி அபுபக்கர் சித்திக்கிற்கு தொடர்பு இருக்கலாம் என சிபிசிஐடி போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த குண்டு வெடிப்பில் அபுபக்கர் சித்திக் அல்லது வேறு ஏதாவது தீவிரவாத கும்பலுக்கு தொடர்பு இருக்குமா? என்பது குறித்து வேலூர் சிறையில் இருந்த பக்ருதீன் கூட்டாளிகளிடம் சிபிசிஐடி போலீஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசிய விசாரணை நடத்தினர். பின்னர், மதுரையில் இருந்து வந்திருந்த சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன் இவர்களிடம் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளது. இதனை உறுதிப்படுத்தவும் தலைமறைவாக உள்ள அபுபக்கர் சித்திக் குறித்த தகவல்களை திரட்டவும் சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காகவே, நீண்ட நாட்களாக விசாரணையில் இருந்த பஞ்சாட்சரம் கொலை வழக்கில் இவர்கள் மூவரும் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. வேலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் இருவரிடம் தனித்தனி அறையில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.