Published : 02 Feb 2020 07:52 AM
Last Updated : 02 Feb 2020 07:52 AM

குரூப்-4 தேர்வு விவகாரத்தைத் தொடர்ந்து குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் அரசு ஊழியர்கள் 2 பேர் கைது; இடைத்தரகர் ஜெயக்குமார் ஆந்திராவில் பதுங்கல்

சென்னை

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக காரைக்குடி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் வேல்முருகன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய நபரான இடைத்தரகர் ஜெயக்குமாரை பிடிக்க ஆந்திராவுக்கு சிபிசிஐடி போலீஸார் விரைந்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் நிரந்தர தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள், பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் என 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் தொடர்புடையை இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவர் ஆந்திராவில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து 4 பேர் கொண்ட சிபிசிஐடி தனிப்படையினர் ஆந்திராவில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமாரின் புகைப்படத்தை வெளியிட்டு, அவர் குறித்து விவரம் தெரிந்தால் உடனே தகவல் தெரிவிக்கும்படி சிபிசிஐடி போலீஸார் அறிவிப்பு வெளியிட்டனர். அதைப்பார்த்து ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் மேல்மருவத்தூர் பகுதியிலும் போலீஸார் தேடிவருகின்றனர்.

குரூப்-2ஏ முறைகேடு

இதேபோல் குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு குறித்த புகாரின்பேரில், சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக இருக்கும் சித்தாண்டி என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. சித்தாண்டியின் மனைவி மற்றும் தம்பி, தம்பியின் மனைவி, மற்றொரு தம்பி என 4 பேர் கடந்த ஆண்டு குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், ராமநாதபுரத்தை மையமாக கொண்டு தேர்வு எழுதி, மாநில அளவில், முதல் 10 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், சித்தாண்டி இடைத்தரகராகவும் செயல்பட்டு பலரிடம் பணம் வாங்கிக்கொண்டு, அரசு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறார். இதுகுறித்து, சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

சித்தாண்டியின் தம்பி வேல்முருகன் காரைக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக அவரை சிபிசிஐடி போலீஸார் சென்னை அழைத்து வந்து கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்தனர். அண்ணன் சித்தாண்டி மூலம் பணம் கொடுத்து பணியில் சேர்ந்ததால் அவரை கைது செய்திருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக இருக்கும் ஜெயராணி என்பவரையும் சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர். இவரும், இடைத்தரகர் மூலம் பணம் கொடுத்து பணியில் சேர்ந்ததால் கைது செய்திருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்வர்கள் கருத்து

இந்தத் தேர்வு முறைகேடுகள் வழக்கில் டிஎன்பிஎஸ்சியின் கீழ்மட்ட ஊழியர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முறைகேட்டில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் ஒருவர் மீதுகூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தேர்வர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்வு முறைகேடுகள் வழக்கில் டிஎன்பிஎஸ்சியின் கீழ்மட்ட ஊழியர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முறைகேட்டில் தொடர்
புடைய உயர் அதிகாரிகள் ஒருவர் மீதுகூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x