

தமிழகத்தில் கரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக சுகாதாரத் துறை தீவிர முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், உடல் சோர்வு, மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகை வைரஸ் ஆகும். விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு இது பரவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த நோய் அறிகுறிகள் கண்ட நபர்கள் இருமும்போதும், தும்மும்போதும் வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் நேரடியாகவும், அந்த நீர்த் திவலைகள் படிந்துள்ள பொருட்களை மற்றவர்கள் தொடும்போது கைகள் மூலமாகவும் பரவ வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசின் தேசிய நோய் கண்காணிப்பு நிலையத்தில் இருந்து கடந்த 19-ம் தேதி பெறப்பட்ட எச்சரிக்கையை அடுத்து, தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, மாநில, மாவட்ட அளவிலான தொற்றுநோய் தடுப்பு விரைவு குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டு, அவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினமும் காணொலி காட்சி மூலம் மாநில, மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களை தொடர்பு கொண்டு, கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகிறார்.
சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்படுகிறது. மருத்துவக் குழுவினர் பரிசோதனை மூலமாகவும் கண்காணித்து வருகின்றனர்.
விமான நிலையங்களில் சூழ்நிலையை பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சீனாவில் இருந்து இதுவரை தமிழகம் வந்த பயணிகளுக்கு கரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டு, அனைவரும் பொது சுகாதாரத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
சென்னை அரசு பொது மருத்துவமனை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்காக தனி பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட 4 நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலும் யாருக்காவது கரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல ஏதுவாக சிறப்பு அவசர வாகனம், சுய பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சுய பாதுகாப்பு உபகரணங்கள், N95 பாதுகாப்பு முகக் கவசங்கள், 3 அடுக்கு முகக் கவசங்கள் ஆகியவை போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் காய்ச்சல் குறித்த மருத்துவ உதவி மற்றும் ஆலோசனைகளைப் பெற விரும்புவோர் பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் செயல்படும் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையை 044-29510400, 29510500 மற்றும் 94443 40496, 87544 48477 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ‘104’ சேவை மையத்தையும் தொடர்பு கொள்ளலாம். கரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை சமூக வலைதளங்கள் மூலம் பொது சுகாதாரத் துறை பகிர்ந்து வருகிறது.பொதுமக்கள் சோப்பு போட்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
குறைந்தபட்சம் 30 விநாடி நேரமாவது நன்கு தேய்த்து கை கழுவ வேண்டும். இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொது இடங்கள், கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம். அசைவ உணவு உண்பவர்கள் நன்கு வேகவைத்த பிறகு சாப்பிட வேண்டும். கரோனா வைரஸ் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.