Published : 02 Feb 2020 07:04 AM
Last Updated : 02 Feb 2020 07:04 AM

பட்ஜெட்டில் விவசாயம், கிராமப்புற மேம்பாடு குறித்த அறிவிப்பு: விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வரவேற்பு

மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மகிழ்ச்சி அளிப்பதாக பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கை:

இந்திய நாட்டில் பெரும்பான்மை மக்கள் செய்யக் கூடிய தொழிலாக விவசாயம் இருக்கிறது. பசுமைப் புரட்சி காலத்தைப் போல விவசாயத்தை தொழில்நுட்பரீதியாக மேம்படுத்த வேண்டும். இதைத்தான் பல்வேறு பொருளாதார ஆய்வுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

அதாவது விவசாய முன்னேற்றத்துக்கு ஒரு முழுமையான அணுகுமுறையை நாம் பின்பற்ற வேண்டும். அதன்படி தற்போதைய மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறை மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து விரிவான திட்டமிடலுடன் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

இந்த பட்ஜெட் இந்தியா மாபெரும் விவசாய சக்தியுடைய நாடாக மாறுவதற்கான முயற்சியை முன்னெடுக்கிறது. அதேநேரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் தொழில்நுட்பரீதியாக இன்னும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் செயல்படுத்தப்பட வேண்டும். அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் எங்களிடம் உள்ளன.

ஆனால், அவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும். மத்திய அரசு அறிவித்த அனைத்து திட்டங்களும் திறம்பட செயல்படுத்தப்பட்டால் கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் அடைவதுடன், விவசாயிகளின் துயரமும் குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x