

யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவடைந்ததால் பழநி திரும்பிய கோயில் யானை கஸ்தூரியை இணை ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் யானை கஸ்தூரி. இந்த யானை கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் தொடங்கிய யானைகள் புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டுச் சென்றது.
17-வது முறையாக புத்துணர்வு முகாமிற்கு சென்ற 55 வயதான கஸ்தூரி 48 நாட்கள் நடைபெற்ற முகாமை நிறைவு செய்து இன்று (பிப்.1) பழநி திரும்பியது.
4640 கிலோ எடையுடன் சென்ற யானை 100 கிலோ குறைந்து தற்போது 4540 கிலோ எடையுடன் திரும்பியுள்ளது. எடை குறைந்தாலும் யானை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், புத்துணர்வு முகாமில் கலந்துகொண்டு திரும்பிய யானை கஸ்தூரி முழு உடல்தகுதியுடன் இருப்பதாக கால்நடை மருத்துவக் குழுவினரும் உறுதி செய்தனர்.
நாளை தைப்பூசத் திருவிழா தொடங்கவுள்ள நிலையில் பழநி வந்தடைந்த யானை கஸ்தூரியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு சென்றனர்.