

மாசி மகாசிவராத்திரி திருவிழாவுக்காக தேனி மாவட்டம் தேவதானம்பட்டியில் உள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள தலமாகும்.
குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இங்குள்ள காமாட்சி அம்மனை குலதெய்வமாக வழிபடுவது வழக்கம். அதே போல் மூடப்பட்ட கதவுகளுக்கே இந்தக் கோயிலில் பூஜைகள் நடைபெற்று வருவது இன்னொரு சிறப்பாகும்.
மிகவும் சிறப்பு வாய்ந்த பழமையான இத்திருக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
இதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா வரும் 21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கொடியேற்றும் வைபவம் இன்று நடைபெற்றது.
கொடியேற்றத்திற்காக 100 அடி உயரத்திற்கும் மேல் உள்ள பச்சை மூங்கிலை வெட்டிவந்து பூஜை செய்து மூங்கிலில் கொடிகட்டப்பட்டு மூங்கில் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு விரதம் ஏற்க காப்புகட்டிச் சென்றனர். இந்த நிகழ்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.