

பல் கட்டும் சிகிச்சை, பல் கேப் மாட்டும் சிகிச்சைகள் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படாததால் அரசு மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகள் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவத்துறையில் மற்ற சிகிச்சைகளைக் காட்டிலும் தற்போது பல் மருத்துவத்திற்கே நோயாளிகளுக்கு அதிகமான செலவு ஏற்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் வேர் சிகிச்சைக்கு ரூ.1,000 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், ஒரு பல்லுக்கு கேப் போடுவதற்கும், பல் கட்டுவதற்கும் ரூ.2,500 ஆயிரம் ரூ.6 ஆயிரம் வரையும் கட்டணம் பெறப்படுகிறது. அதுபோல், கழட்டி மாற்றப்படும் செட் பற்களுக்கும்அதன் தரத்தை பொறுத்து அதிகமான கட்டணம் பெறப்படுகிறது. அதனால், நடுத்தர, ஏழை பல் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியவில்லை.
அதனால், ஒரு கட்டத்தில் பல்லையே எடுக்கும் சூழலுக்கு நோயாளிகள் தள்ளப்படுகின்றனர். அதுவும் கிராமப்புற ஏழை நோயாளிகளுக்கு பல் சிகிச்சைக்கு வேர் சிகிச்சை, பல் கேப் மாட்டுவது, பல் கட்டுவது போன்ற சிகிச்சைகள் இருப்பது பற்றிய விழிப்புணர்வே இல்லை. அதனால், எந்த பல் தொல்லை தருகிறதோ அந்தப் பல்லை பிடுங்கிப் போட்டு கடந்து செல்வதால் அடுத்தடுத்த பற்களும் பாதிக்கப்படுகின்றன.
தனியார் மருத்துவமனைகளில்தான் பல் மருத்துவ சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் பெறுகிறார்கள் என்றால் தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பல் கட்டுவது, பல் கேப் மாட்டுவது, கழட்டி மாட்டும் செயற்கை பல் பொருத்துவது போன்ற உயர் சிகிச்சைகள் இலவசமாக பார்க்கப்படுவதில்லை.
பல் எடுக்காமல் அதை காப்பாற்றவே வேர் சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சைக்கும், எக்ஸ்ரே எடுப்பதற்கும் அரசு மருத்துவமனைகளில் கட்டணம் கிடையாது. ஆனால், பாதிக்கப்பட்ட பல்லுக்கு மேல் கேப் போடுவதற்கும், கழட்டி மாட்டும் வகையிலான பிளாஸ்டிக் பல் செட் பொருத்துவதற்கும், பாதிக்கப்பட்ட பல்லுக்கு பதில் மாற்றுப் பல் கட்டுவதற்கும் கட்டணம் பெறப்படுகிறது.
இந்த சிகிச்சைகளுக்கு ஒரு பல்லுக்கு ரூ.320 மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி அந்த ரசீதை, பல் மருத்துவ சிகிச்சைப்பிரிவில் வழங்க வேண்டும். அதன்பிறகே பல் மருத்துவ சிகிச்சைப்பிரிவில் பல் கட்டுவது, பல் கேப் மாட்டுவதற்கான சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
பிளாஸ்டிக் பல் செட்டில் ஒரு பல்லுக்கு ரூ.16 கட்டணம் பெறப்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 150 நோயாளிகள் வரை சிகிச்சைக்கு வருகின்றனர்.
முன்பு செராமிக் லேப் இல்லாததால் பல் நோயாளிகள் பல் கேப் மாட்டுததற்கும், மாற்று பல் பொருத்துவதற்கும் மிகுந்த சிரமம் அடைந்தனர். தற்போத செராமிக் லேப் வந்துவிட்டதால் இந்த சிகிச்சைகள் தடையின்றி நடக்கிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘தனியார் மருத்தவமனைகளில் செராமிக் பல், ஜிர்கோனியா(Zirconia) பல் கேப் மற்றும் மாற்றுப்பல் பொருத்தப்படுகிறது. ஆனால், அரசு மருத்துவமனையில் செராமிக் பல் மட்டுமே தயார் செய்யப்படுகிறது. பல் சிகிச்சை என்றாலே அது அழகு சிகிச்சைபட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால், முதல்வர் காப்பீட்டு திட்டம், தனியார் இன்சூரன்ஸ் திட்டத்தில் பல் சிகிச்சை சேர்க்கப்படவில்லை.
இந்த சிகிச்சைகள் ஏழை நோயாளிகளுக்கு இலவசமாகக் கிடைக்க குறைந்தப்பட்சம் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதுதான் நிறைவேற்றியப்பாடில்லை.
அதேநேரத்தில் விபத்தில் தாடை உடைந்தால் அதற்கான சிகிச்சை மட்டும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் உள்ளது, ’’ என்றார்.