Last Updated : 01 Feb, 2020 05:30 PM

 

Published : 01 Feb 2020 05:30 PM
Last Updated : 01 Feb 2020 05:30 PM

மானாமதுரையில் ஓராண்டாக இயங்காத ஏடிஎம் இயந்திரம்: மாலை அணிவித்து கொந்தளிப்பை வெளிப்படுத்திய இளைஞர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், கடந்த ஓராண்டாக செயல்படாத ஏடிஎம் இயந்திரத்துக்கு மாலை அணிவித்து தனது கொந்தளிப்பை இளைஞர் ஒருவர் வெளிப்படுத்தினார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பிரதான சாலையில் அமைந்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. மானாமதுரையில் இதுதான் முதன்மை வங்கியாகும். அதன் அருகே எஸ்.பி.ஐ ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு பணம் எடுக்க மற்றும் செலுத்த என இரண்டு முறைகளில் பயன்படும் வகையில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை கடந்த ஓராண்டாகவே சரியான பராமரிப்பு இன்றி அடிக்கடி வேலை செய்யமால் இருந்து வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கப் போனால் பணம் இல்லை எனவும், கணக்கில் பணம் செலுத்த முயன்றால் பணம் செலுத்த முடியாது எனவும் திரையில் வருவதாகவே இருந்தது. இதனால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகிவருகின்றனர்.

இது குறித்து பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காததால், தேமுதிக நகரச் செயலாளரும் இளைஞருமான பால்நல்லதுரை என்பவர் ஒரு மாலை வாங்கி வந்து ஏடிஎம் இயந்திரத்திற்கு அதனை அணிவித்து "ஏடிஎம் மையத்தை நிரந்தரமாக மூடுங்கள், இல்லை என்றால் ஒழுங்காகப் பராமரிக்கவும்" என்று கோஷமிட்டார்.

இது குறித்து பால்நல்லதுரை கூறும்போது, "மானாமதுரையில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யின் ஏடிஎம் மையம் கடந்த சில ஆண்டுகளாகவே சரியாக செயல்படவில்லை. இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்காகத்தான் இன்று பூமாலை ஒன்று வாங்கி நிரந்தரமாக சரி செய்து இயங்குவதற்கும் அல்லது நிரந்தரமாக மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்" எனக் கூறினார்.

இதுகுறித்து வங்கி மேலாளரிடம் கேட்டபோது "ஏடிஏம் மையத்தில் சில நபர்கள் தினமும் பழைய ரூபாய் நோட்டுகளை பணம் செலுத்தும் இயந்திரத்தில் போடுகின்றனர். தினமும் காலை சரிசெய்தாலும் அன்றைய தினமே மாலைக்குள் யாராவது ஒருவர் செய்கிற தவறினால் மீண்டும் ஏடிஏம் பழுதாகி விடுகிறது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x