பட்ஜெட் 2020: வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாதது ஏமாற்றமளிக்கிறது; ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்
ராமதாஸ்: கோப்புப்படம்
Updated on
1 min read

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமானது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட்டாக இது இருந்தாலும், அவர் தாக்கல் செய்யும் முழுமையான முதல் பட்ஜெட் இதுவாகும்.

நிர்மலா சீதாராமன் தனது உரையில், "உலக அளவில் இந்தியா தற்போது 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. நாட்டின் கடன் 2014-ம் ஆண்டில் ஜிடிபியில் 52.2 சதவீதம் இருந்த நிலையில் தற்போது அது 48.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. சராசரியாக பணவீக்கம் 4.5 சதவீதம் மட்டுமே இருக்கிறது. 6.11 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் குறித்து பல தலைவர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாதது ஏமாற்றமளிக்கிறது. அதேநேரத்தில் வரிவிகித படிநிலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதும், வரிவிகிதம் குறைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது!

எல்ஐசி பங்குகளை ஐ.பி.ஓ மூலம் பங்கு சந்தைகள் வழியாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது. இது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமானது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in