

டாஸ்மாக் மதுபான கடையை அடித்து உடைத்த வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களிடம் நீதிபதி 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், புரட்சிகர மாணவர் அமைப்பை சேர்ந்தவர்களும் கடந்த 3 ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக்கடையை அடித்து உடைத்தனர். இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மற்ற 11 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட ஒரு இளைஞரின் தாயாரான சுலோச்சனா சென்னை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது மகன் மற்றும் அவனுடன் கைது செய்யப்பட்டவர்களை போலீஸார் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 5 வது கூடுதல் அமர்வு நீதிபதியான செந்தில் குமரேசன் இது பற்றி விசாரணை நடத்தி 17 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து நீதிபதி செந்தில் குமரேசன், நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் புழல் சிறைக்கு சென்றார். அங்குள்ள மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்களிடம் விசாரணை நடந்தினார். இந்த விசாரணை சுமார் 3 மணி நேரம் நடந்தது.