

தான் தொப்பி அணியாத முஸ்லிம் எனவும், உங்களில் ஒருவன் எனவும் முஸ்லிம் அமைப்புகளிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று (பிப்.1), தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சில பிரதிநிதிகள் பாமக நிறுவனர் ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில், "குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு தொடர்பாக 11 மாநிலங்கள் தடை செய்து வைத்துள்ளன. அனைத்துக் கட்சிகளையும் இயக்கங்களையும் ஒன்று திரட்டி தமிழக அரசு என்பிஆரைச் செயல்படுத்தப் போவதில்லை என்று உறுதி அளிக்கும் வகையில் போராட்டம் நடத்தக் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்பட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
அப்போது எம்எல்ஏ தமிமுன் அன்சாரி மற்றும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, குனங்குடி ஹனீபா உள்ளிட்ட 11 இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உடனிருந்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ராமதாஸ் பேசியதாவது:
"நான் தொப்பி அணியாத முஸ்லிம், உங்களில் ஒருவன். உங்களை சிறுபான்மை என்று சொல்லிக்கொள்ளாதீர்கள். இங்கு சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாகுபாடு கிடையாது. ஒரு கிராமத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் இருந்தால் அக்குடும்பத்திற்கு பிரச்சினை ஏற்படும்போது, அவர்களை ஒரு குடும்பம் என்று எண்ணாதீர்கள். நாங்கள் இருக்கிறோம் என்று ஆதரவு அளியுங்கள். தமிழகத்தில் எல்லா உரிமைகளோடு நாம் வாழ்வோம். அதற்கு எல்லா விதமான பாதுகாப்புகளையும் பாமக அளிக்கும். குடியுரிமை ச் சட்டம் குறித்து நானும் கவனித்துவருகிறேன்".
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.