

வெற்று அறிவிப்புகளுடன் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாக இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு விரைவில் நடைபெறவுள்ள மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் எட்டையபுரம் ரோட்டில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகர மாவட்டத் தலைவர் முரளிதரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய்தத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் மோடி அரசின் வெற்று அறிவிப்பு பட்ஜெட் தான். இதுவரை மோடி அரசு வெறும் அறிவிப்புகளை மட்டும்தான் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது எதையும் செயல்படுத்தவில்லை.
இந்த பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பார்த்த வகையில் ஒன்றும் இல்லை.
வேலை வாய்ப்புக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. ஏற்கெனவே வேலைவாய்ப்பில் இந்தியா உலக அளவில் பின்தங்கிவுள்ளது. இது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மிகப் பெரிய ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்றார்.
நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்க வேண்டியது. ஆனால், 3.8 சதவீதமாக உள்ளது. இதனால் சிறு வணிகர்கள், வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு தெரிவித்த எந்தவித உறுதிமொழியையும் நிறைவேற்றவில்லை. பாஜக தற்போது தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. விவசாயிகள், வர்த்தகர்கள் என யாருக்கும் எந்தவித பயனுமில்லாத தகவல் தான் நிதிநிலை அறிக்கையில் உள்ளன.
மேலும், சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவாக இருந்தாலும் நமது நாட்டில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. அரசியல் சாசனத்துக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றுவதிலேயே இந்த அரசு குறியாக உள்ளது.
டெல்லியில் ஜாமியா பள்ளிவாசல் துப்பாக்கி சூடு சம்பவத்தில், துப்பாக்கியால் சுட்ட நபரை சமூக வளைதலங்களில் அடையாளம் காட்டிய பின்னரும், அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பெரியளவு முறைகேடு நடைபெற்றுள்ளது. உயர் அதிகாரிகள் பலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் ஆதரவு இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன, என்றார்.