

சீனாவில் இருந்து ராமநாதபுரம் வந்த இளைஞருக்கு கரோனோ அறிகுறி ஏதுமில்லை என ராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் குமர குருபரன் உறுதி செய்தார்.
சீனாவை கரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் நிலையில், அங்கு கூலி வேலை பார்த்துவந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 20 பேரும் அண்மையில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர்.
இவர்களில் திருவாடானை வட்டத்தைச் சேர்ந்த 17 பேர், ராமநாதபுரம் பரமக்குடி முதுகுளத்தூர் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் உள்ளனர்.
இவர்கள் இந்தியா வந்தபோது விமான நிலையத்திலேயே தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ராமநாதபுரத்துக்கு அவர்கள் வந்ததுமே சுகாதாரத்துறை ஊழியர்கள் அவர்களைச் சந்தித்து குறைந்தது 28 நாட்களுக்காவது வீட்டிலேயே இருக்கும்படியும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், தினமும் மாலை நேரங்களில் 20 பேரின் இல்லங்களுக்கும் நேரில் செல்லும் சுகாதாரத்துறை ஊழியர்கள் அவர்களில் யாருக்கேனும் சளி, காய்ச்சல் போன்ற உபாதைகள் உள்ளதா எனக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை அந்த 20 பேரில் ஒருவருக்குக் காய்ச்சல், இருமல் இருப்பது தெரியவந்தது. உடனே அவரை பாண்டுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவருக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.
ஆனால், அதற்குள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கரோனோ அறிகுறியுடன் இளைஞர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவ அங்கே செய்தியாளர்கள் குவிந்தனர்.
இதனால் பதற்றமடைந்த அந்த இளைஞர் உணவு அருந்திவிட்டுச் செல்வதாகக் கூறி மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை.
அந்த இடைவேளையில், கரோனா வைரஸ் அறிகுறியுடன் வந்த இளைஞர் தப்பியோட்டம் போன்ற செய்திகள் வைரலாகின.
இதனையடுத்து, ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர், அந்த இளைஞருக்கு கரோனா அறிகுறி இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
மேலும், அவருக்கு வெள்ளை அணுக்கள் அதிகமாக இருப்பதால் வேறு சில நோய்கள் பற்றி சந்தேகம் இருப்பதால் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
சுகாதாரத் துறை இயக்குநரின் விளக்கத்துக்குப் பின்னர் கரோனா பீதி முடிவுக்கு வந்தது.