Published : 01 Feb 2020 01:19 PM
Last Updated : 01 Feb 2020 01:19 PM

அன்று புரியவில்லை, இன்று புரிகிறது அய்யா: பள்ளி நாட்கள் குறித்து கமல் நெகிழ்ச்சி

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களை நேற்று (ஜன.31) மாலை சந்தித்து கலந்துரையாடினார்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள எம்.சி.டி.எம் பள்ளியில் 1970 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற கமல்ஹாசன் வகுப்பறை மற்றும் விளையாட்டு மைதானத்தைச் சுற்றிப் பார்த்து, நண்பர்களுடன் பழைய நினைவுகளைப் பேசி மகிழ்ந்தார்.

மேலும் தனது நண்பர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகளையும் அவர் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதை:

"நண்பர்காள்

2020, ஜனவரி 31-ம் தேதியன்று நிகழ்ந்த சந்திப்பு ஒரு காதலர் தினம்.

நாம் ஒவ்வொருவரும் காதலராகவே இருந்தோம்.

அறிவின்

நட்பின்

வெவ்வேறு கடவுளரின்

சம வயதுப் பெண்களின்...ஹா ஹா ஹா...

கடைசியாய்

கல்வியின் காதலராகவே இருக்க முயற்சித்தோம்.

இன்றைய நமது சந்திப்பு, என்னை சமநிலைப்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்று.

அவையடக்கம் நம் அனைவரிலும் இருந்தது எனக்கு வியப்பாகவே இல்லை. அது நாம் கற்றது.

பள்ளிப் பருவத்திலேயே சாதித்த பலர் போக, விடுபட்ட சிலரும் இன்று சாதனையாளராக

மாறியதே வியப்பு! நான் உட்பட...

தோற்றவர்கள் என்று அக்கூட்டத்தில் யாருமே இல்லாத பெருமை நமதும், நமக்கு கற்பித்த நமது பள்ளியுடையதும் ஆகும்.

இறந்துவிட்ட நம் நண்பர்களும், இருந்திருந்தால் வெற்றியாளர்களாக வாழ்ந்திருப்பர் நம்முடன்.

ஏ.கே.விஜயன், நாகேந்திரகுமார், வாசு, வெங்கடேசன்...ம்ம்...

இன்னமும் இழப்பை நோகாமல், பெற்றதைப் போற்றுவோம்.

கே.டி.ஜி, கே.என்.டி, எம்.கே.ஆர்...

பல ஆசிரியர்களின் இயற்பெயர் நினைவில் இல்லாததால், நாமிட்ட காரணப் பெயர் கூறி அவர்களை வணங்குகிறேன்.

புட்டி அவர்களை,

கஜபாதம் அவர்களை,

ஜிப்பி அவர்களை,

ரப்பர் அவர்களை,

முருங்கைக்காய் அவர்களை,

பாக்ஸர் சாம் அவர்களை,

முக்கியமாக,

ஆங்கில வகுப்பு மாணவர்களுக்கு விடாப்பிடியாய் தமிழ் கற்பித்த சண்முகம்பிள்ளை அய்யா அவர்களை வணங்குகிறேன்.

பலருக்கும் நினைவிருக்கும், வகுப்பில் அய்யா என்னைக் கடிந்த நாள்...

கமல்,

தங்கமலராக இருப்பது சிறப்பன்று,

மணம் வீசும் மலராய் மலர்க...

கமல்! புரிகிறதா? என்றார்...

அன்று புரியவில்லை... இன்று புரிகிறது அய்யா...

பள்ளியின் தலைமை ஆசிரியை உமா ரோஸ்லின் அவர்களுக்கு நன்றி...

இன்றைய பள்ளியின் ஆசிரியர்கள் பலர், என் பிள்ளைகளின் வயதில் இருப்பது மாணவனாக எனக்கு வியப்பு இல்லை.

கல்விக்கும் கற்பித்தலுக்கும் வயதில்லை...

சகாக்களே...

தொடர்ந்து கற்போம்,

கற்ற கை மண்ணளவை, பிறந்த மண் போல் காப்போம்.

மகிழ்ந்தேன், தெளிந்தேன்"

இவ்வாறு கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x