Published : 01 Feb 2020 11:54 AM
Last Updated : 01 Feb 2020 11:54 AM

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: 15 பேர் குற்றவாளிகள்; ஒருவர் விடுதலை - சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் எனவும், ஒருவரை விடுதலை செய்தும் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த 12 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்தக் குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக இருந்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்களைக் குண்டர் தடுப்புக் காவல் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ம் தேதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணையை மகளிர் நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.

இந்த நிலையில், மகளிர் நீதிமன்றத்திலிருந்து விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க மகளிர் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக என்.ரமேஷ் நியமிக்கப்பட்டார். இதே போன்று குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் தரப்பில் தனித்தனியாக வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசுத் தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். மேலும் 120 வழக்கு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. 11 மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.

குற்றம் சாட்டப்பட்ட மற்ற 16 பேரின் விவரங்கள்:

ரவிகுமார் (56), சுரேஷ் (32), ராஜசேகர் (48), எரால் பிராஸ் (58), அபிஷேக் (28), குமரன் (60), முருகேசன் (54), பரமசிவம் (60), ஜெய்கணேஷ் (23), பழனி (40), தீனதயாளன் (50), பாபு (36), ராஜா (32), சூர்யா (23), குணசேகரன் (55), ஜெயராமன் (26), உமாபதி (42) ஆகியோராவர்.

இவர்களில், 12 ஆவதாக குற்றம் சாட்டப்பட்ட பாபு என்பவர் சிறையிலேயே இறந்து விட்டார்.

கீழ்க்கண்ட பிரிவுகளின் கீழ் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டம் 354 – பி, 366 (பாலியல் வன்கொடுமை), 376 – ஏ பி ( காயமேற்படுத்துதல்), 376 பி டி ( கூட்டு பாலியல் வன்கொடுமை) 307 (கொலை முயற்சி), 506 (2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழும், பாலியல் குற்றங்களில் இருந்து சிறாரை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் 10 மற்றும் 12-வது பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுதவிர, 12 வயதுக்குக் குறைவான சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குற்றவியல் திருத்தச் சட்டத்தின் புதிதாக நிறைவேற்றப்பட்ட பிரிவுகளின் கீழும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று (பிப்.1), இந்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், 16 பேரில் 15 பேர் குற்றவாளி எனவும், தோட்டக்காரரான குணசேகர் என்பவரை மட்டும் விடுதலை செய்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x