என்எல்சி தொழிலாளர்களின் போராட்டத்தில் வைகோ பங்கேற்பு

என்எல்சி தொழிலாளர்களின்  போராட்டத்தில் வைகோ பங்கேற்பு
Updated on
2 min read

நெய்வேலியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் என்எல்சி தொழிலாளர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார்.

நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி கடந்த மாதம் 20-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெய் வேலி, புதுச்சேரி, சென்னை, டெல்லியில் நடந்த பேச்சுவார்த் தைகளில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதற் கிடையே, தொமுச நிர்வாகியை பணி நீக்கம் செய்ததால் ஒப்பந்த தொழிலாளர்களும் காலவரை யற்ற வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.

மேலும், நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தை தொழிற்சங்க கூட்டமைப்பினர் தொடங்கினர். இரண்டாவது நாளாக நேற்று உண்ணாவிரதம் தொடர்ந்தது. என்எல்சி நிறுவனத்தில் நடை பெற்ற சுதந்திர தின விழாவை தொழிலாளர்கள் புறக்கணித்து உண்ணாவிரத திடலிலேயே சுதந்திர தினத்தை கொண்டாடினர். ஓய்வுபெற்ற மூத்த தொழிலாளி இருதயசாமி தேசிய கொடி ஏற்றினார்.

இந்நிலையில், உண்ணா விரதம் நடைபெற்று வரும் ஐஎன்டியூசி அலுவகத்துக்கு நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். அவர், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரி வித்தார்.

மேலும், அவர் பேசும்போது, “தொழிலாளர்களுக்கும் விவசாயி களுக்கும் நன்மை செய்யும் அரசாக இல்லாமல் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசாக மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு உள்ளது. தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் என்எல்சியை கூறு போட இதுவரை 3 முறை மத்திய அரசு முயற்சி செய்தது. அப்போதெல்லாம் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு நின்று முறியடித்தனர். வேறு எங்கும் இல்லாத வகையில் இங்கு அனைத்து கட்சியினரும், தொழிற்சங்கத்தினரும் ஒற்றுமை யாக போராடுவதை பார்த்தால் மகிழ்ச்சியாக உள்ளது.

ரூ.1,500 கோடிக்கு மேல் லாபத்துடன் இயங்கும் நவரத்தினா அந்தஸ்து பெற்ற நிறுவனமாக என்எல்சி உள்ளது. இதற்கு காரணமான தொழிலாளர்கள், தங்களுக்கான உரிமையைத்தான் ஊதிய உயர்வாக கேட்கிறார்கள். இதில் எவ்விதமான தவறும் இல்லை. மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும். அரசியல் கட்சிகளும் பாகுபாடு இன்றி என்எல்சி தொழிலாளர்களுக்காக போராடி வருகிறோம். மத்திய அரசு என்எல்சி தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்” என்றார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி

இதற்கிடையே, தமிழக வாழ் வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் வெளியிட்டுள்ள அறிக் கையில், ‘என்எல்சி தொழிலாளர் கள், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பொறுமையுடன் போராடி பார்த்துவிட்டு தற்போது 27 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், என்எல்சி நிர்வாகமோ தொழி லாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் உள்ளது. இந்த நிலை நீடித்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தென்னிந்தியாவே இருளில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, என்எல்சி தலைவர், இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகள் அலுவலகங்கள், இல்லங்களை முற்றுகையிடும் போராட்டத்தை தொழிலாளர்கள், பொதுமக்களுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தும்’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in