

சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விமல் என்பவர் சீனாவில் இருந்து வந்தவர். அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி இருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இதேபோன்று, கிருஷ்ணகிரி மாணவருக்கும் கரோனா அறிகுறி இல்லை.
இவர்கள் இருவர் உட்பட சீனாவில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ள 242 பேரும் பொது சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் அனைவரிடமும், பொது இடங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசுமருத்துவமனை உட்பட தமிழகத்தில் முக்கிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கரோனா வைரஸ் பரிசோதனைக்கான சிறப்பு வசதியுடன்கூடிய வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ளதால் நாம் அச்சம், பீதி அடையத் தேவை இல்லை. எனினும், நாம் கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது.
கேரள மருத்துவ உயர் அலுவலர்களோடு தமிழக சுகாதாரத் துறைஅலுவலர்கள் தொடர்பில் உள்ளனர். கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் பகுதியிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது.
பேருந்து நிலையம், அலுவலகம், மார்க்கெட், மால், திரையரங்குகள் போன்ற பொது இடங்களுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது சோப்பு திரவம் அல்லது சோப்பால் கை கழுவும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
காற்று மூலம் எளிதாக பரவக்கூடிய, தொற்றுநோயான இந்தவைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் குறித்தும், அதற்கான தடுப்புநடவடிக்கைகள் குறித்தும் சுகாதாரத் துறை சார்பிலான தகவல்களை மட்டும் மக்கள் நம்ப வேண்டும். சமூக வலைதளங்களில் வைரலாகும் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
இந்தியாவிலேயே புனேவில் உள்ள ‘மாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி’ எனும் மையத்தில் மட்டும்தான் இந்த நோய் பாதிப்பை உறுதி செய்வதற்கான வசதி உள்ளது.
இதையடுத்து, சென்னையில் உள்ள கிங் ஆராய்ச்சி மையத்தில் இதற்கான வசதி ஓரிரு நாட்களில் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்தியாவில் 10 இடங்களில் இதற்கான ஆய்வகத்தை ஏற்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. யாரும் அச்சப்படத் தேவை இல்லை என்றார்.