

எஸ்.ஐ. வில்சன் கொலைக் குற்றவாளிகள் தவுபீக், அப்துல் ஷமீம் ஆகிய இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.
களியக்காவிளை சோதனைச்சாவடியில் எஸ்.ஐ. வில்சன் கொலைவழக்கில் கைதாகியுள்ள தவுபீக், அப்துல் ஷமீம் ஆகியோர், நீதிமன்ற அனுமதியுடன் போலீஸாரால் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.
அப்போது, தீவிரவாதிகள் இருவரும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி, கொலையின்போது அணிந்திருந்த உடைகள் ஆகியவை இருந்த இடங்களைஅவர்கள் அடையாளம் காண்பிக்க,போலீஸார் அவற்றைக் கைப்பற்றினர்.
மேலும் கொலை நடந்த களியக்காவிளை சோதனைச்சாவடிக்கு கொண்டு சென்று இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. இருவரின் வீடுகளில் தனிப்படையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இவர்களின் 10 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், நாகர்கோவில் மாவட்ட முதன்மை அமர்வுநீதிமன்றத்தில் நீதிபதி அருள் முருகன் முன்பு இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். கொலைக்கு பயன்பட்ட துப்பாக்கி, கத்தி உட்படமுக்கிய ஆதாரங்களும், வாக்குமூலங்கள் அடங்கிய 50-க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் நீதிபதியிடம் போலீஸார் சமர்ப்பித்தனர்.
அப்போது, இருவரையும் 15நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும், மீண்டும் பிப்ரவரி 14-ம் தேதி நாகர்கோவில் மாவட்டமுதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்ட அப்துல் ஷமீமும், தவுபீக்கும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.