Published : 01 Feb 2020 08:48 AM
Last Updated : 01 Feb 2020 08:48 AM

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் வங்கிகளில் சேவை பாதிப்பு

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி சேவை பாதிக்கப்பட்டது.

வங்கி ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடவேண்டும், வாரத்துக்கு 5 நாட்கள் பணி நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு உட்பட 9 சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்தியா முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறி வித்தது.

இதையடுத்து கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஜனவரி 31மற்றும் பிப். 1 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூட்டமைப்பு அறிவித்தது.

அதன்படி, தமிழகம் உட்பட நாடுமுழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூடப்பட்டதால், பணம் எடுப்பது, பணம் செலுத்துவது, காசோலை பரிமாற்றம், வங்கி பாஸ் புக் பதிவு போன்றபல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு

சென்னை மாவட்ட ஆட்சியர்அலுவலகம் அருகில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தலைமையில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு வங்கி ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை திசை திருப்ப வேண்டாம் என கூறி போலீஸாரிடம் தெரிவித்து, அவர்களை வங்கி ஊழியர்கள் வெளியேற்றினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.எச்.வெங்கடாச்சலம், “இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், வங்கிச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

31 லட்சம் காசோலைகள் தேக்கம்

இதற்கு மத்திய அரசும், வங்கி நிர்வாகமும்தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 லட்சம் காசோலைகள் உட்பட நாடுமுழுவதும் ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பிலான 31 லட்சம் காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 16 ஆயிரம் வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மார்ச் 11 முதல் 13-ம் தேதி வரை வேலை நிறுத்தம் திட்டமிட்டப்படி நடைபெறும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x