Published : 01 Feb 2020 08:44 AM
Last Updated : 01 Feb 2020 08:44 AM

தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படுமா?- தமிழக மக்கள் எதிர்பார்ப்பு

2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் நகரமயமாக்கல் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகியுள்ளது. குறிப்பாக, ரயில் போக்குவரத்து இதில் முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழகத்தில் பிரதானமான சென்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதை திட்டம் கடந்த 1998-ம் ஆண்டு தொடங்கியது. சிறுக, சிறுக நடைபெற்று வந்த இரட்டை பாதை பணி தற்போது மதுரை வரை முடிந்துள்ளது. அடுத்தகட்டமாக மதுரை - கன்னியாகுமரி வரை மின்மயமாக்கலுடன் இரட்டை பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகள் 2022-க்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.3 ஆயிரம் கோடியாகும். ஆனால், இதுவரை ரூ.700 கோடியே செலவிடப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை விரைந்து முடிக்க போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

7 திட்டங்கள்

தமிழகத்தில் சென்னை - மாமல்லபுரம் - கடலூர் (179 கி.மீ), திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை (70 கி.மீ), அத்திப்பட்டு - புத்தூர் (88 கி.மீ), ஈரோடு - பழநி (91 கி.மீ), பெரும்புதூர் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி (60 கி.மீ) உட்பட 7 ரயில் திட்டங்கள் கடந்த 2006 முதல் 2013-ம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் அறிவிக்கப்பட்டன.

இந்த திட்டங்களின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ.10 ஆயிரம் கோடியாகும். ஆனால், இந்த திட்டங்களுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யாததால், கடந்த 11 ஆண்டுகளாக பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேற்கண்ட திட்டங்களில் பெரும்பாலானவற்றுக்கு மாநில அரசு இன்னும் நிலங்களை கையகப்படுத்தி தரவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, இந்த ரயில் திட்டங்கள் கைவிடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடப்பு பட்ஜெட்டில் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

டிஆர்இயு மூத்த நிர்வாகி ஆர்.இளங்கோவனிடம் இதுதொடர்பாக கேட்டபோது, ‘‘தமிழகத்தில், தெற்கு ரயில்வேயில் கிடப்பில் உள்ள இரட்டை வழிப்பாதை, அகல ரயில்பாதை திட்டங்கள், புதிய வழித்தடங்கள் அமைக்கும் பணிகளை விரைவில் முடிக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதேபோல், ரயில்வேயில் உள்ள 3 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், ரயில்வே குடியிருப்புகள், மருத்துவமனைகளை மேம்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தனியார் பயணிகள் ரயில்களால் கட்டணம் பல மடங்கு உயரும் அபாயம் இருப்பதால், தனியார் ரயில்களை இயக்கும் முடிவை கைவிட வேண்டும்’’ என்றார். இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் தேவையான புதிய திட்டங்கள், கிடப்பில் உள்ள ரயில் திட்டங்கள் மதிப்பீடு குறித்து மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு ஏற்கெனவே அறிக்கை அனுப்பியுள்ளோம்.

எனவே, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யும் நிதியைப் பிரித்து, ரயில் திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், புதிய ரயில் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x