

நாட்டுக்காக உழைக்கும் ராணவ வீரர்கள் மற்றும் அவர்களைப் பிரிந்து தவிக்கும் குடும்பத்தினரின் உணர்வுகளை புத்தகமாக்கி, அதன் விற்பனை மூலம் கிடைத்த வருவாயை முன்னாள் ராணுவ வீரர் நலநிதிக்கு வழங்கியுள்ளார் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர்.
ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சங்கர்ராஜ் (64). ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது நந்திவரம் கூடுவாஞ்சேரியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கமலா,மகன் அரவிந்த்குமார். சங்கர்ராஜ், 1976-ல் இந்திய ராணுவத்தில் கம்யூனிகேஷன் பிரிவில் சேர்ந்தார். 1984-ல் பணியில் இருந்து ஒய்வு பெற்றார். அதன்பின் சொந்த ஊரில்விவசாயம் செய்தவர், பிறகு சென்னை துறைமுகத்தில் கம்யூனிகேஷன் பிரிவில் பணியாற்றி2015-ல் ஓய்வு பெற்றார்.
சங்கர்ராஜ் ராணுவத்தில் பணியாற்றியபோது, உடன் பணியாற்றிய சக வீரர்கள் குடும்பத்தினரின் மனநிலையும் அவர்களை தொடர்பு கொள்ள தவிக்கும் மனைவி, தாய், மகன், மகள்களின் தவிப்பையும் குறிப்பிட்டு `மங்கை, ஒரு வீரரின் மறுபக்கம்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
உலகுக்கு தெரியாத சம்பவங்கள்
ராணுவக கேப்டன் காலியா கார்கில் போரில் கொல்லப்பட்ட நிலையில், அவரின் மனைவி விமான படையில் பணியாற்றி வந்தார். கணவரின் உடலை விமானம் மூலம் மனைவியே கொண்டு வந்த சம்பவம் உட்பட வெளி உலகுக்கு தெரியாத பல்வேறு சம்பவங்களை இந்த புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தக விற்பனை மூலம் கிடைத்த ரூ.11 ஆயிரத்தை முன்னாள் படை வீரர்கள் நல நிதிக்கு சங்கர்ராஜ் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான் ராணுவத்தில் கம்யூனிகேஷன் பிரிவில் பணியாற்றியதால், ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அவர்களை தொடர்பு கொள்வதில் உள்ள சிரமங்கள் எனக்கு தெரியும். தற்போது செல்போன் வந்துவிட்டதால் உடனுக்குடன் யாரும், யாரையும் தொடர்பு கொள்ள முடிகிறது. அந்த காலத்தில் 'ட்ரங்க்-கால்' புக் செய்துதான்பேசிக் கொள்ள முடியும். இதனால் ஒரு ராணுவ வீரனின் மறுபக்கத்தில், அவ்வீரனைச் சார்ந்தவர்களும் எவ்வாறெல்லாம் மனதளவில் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் புத்தகத்தை உண்மையும் கற்பனையும் கலந்து எழுதினேன்.
தற்போது அனைத்து புத்தகமும் விற்று தீர்ந்துவிட்டதால், கூடுதலாக புத்தகம் அச்சடிக்க திட்டமிட்டுள்ளேன். இதில் கிடைக்கும் வருவாயையும் முன்னாள் ராணுவவீரர் நல நிதிக்கு வழங்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.