Published : 01 Feb 2020 08:26 AM
Last Updated : 01 Feb 2020 08:26 AM

பிப்.4-ம் தேதி நாகூர் கந்தூரி விழா சுற்றுலா- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு

சென்னை

நாகூர் கந்தூரி விழா வரும் பிப்.4-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சிறப்புசுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாகை மாவட்டம், நாகூரில் பிரசித்திபெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. சிறந்த மத நல்லிணக்க வழிபாட்டுத் தலமாக திகழும் இந்த தர்காவில், நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம், கந்தூரி விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நாகையில் இருந்து புறப்பட்டு பிப்.5-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைகிறது. பின்னர் நாகூர் தர்காவில் பாத்தியா ஓதி நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படும். இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.

அனைத்து மதத்தினரும் வழிபடும் நாகூர் தர்கா கந்தூரி விழாவில் பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. பிப்.4-ம் தேதி காலை 7 மணிக்கு திருவல்லிக்கேணியில் இருந்து புறப்படும் குளிர்சாதன வசதியுள்ள சொகுசு பேருந்து, சுற்றுலா முடிந்து 6-ம் தேதி காலை சென்னை வந்தடையும்.

சுற்றுலா செல்லும் வழியில்பிச்சாவரம் காண்பதற்கும், திருக்கடையூரில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சுற்றுலாவுக்கு தனி நபருக்கு ரூ.3,400 கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2 என்ற முகவரி, 044-25333333, 25333444, 25333857, 25333850 என்ற தொலைபேசி எண்கள், 180042531111 என்ற கட்டணமில்லா தொலைபேசி அல்லது www.tamilnadutourism.org என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம். இச்சுற்றுலாவுக்கு http://www.mttdonline.com என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x