

பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் சிறு, குறுந்தொழில்துறையை மேம்படுத்த மத்திய பட்ஜெட் உதவ வேண்டுமென்பது தொழில்முனைவோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இன்று (பிப்.1) மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
"ஒட்டுமொத்த ஜிடிபி-ல் 30 சதவீதம் பங்கு வகிக்கும் சிறு, குறுந்தொழில்களின் நலன்களைப் பாதுகாக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் (டாக்ட்) சங்கத் தலைவர் ஜே.ஜேம்ஸ். மேலும் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 10 லட்சம் சிறு, குறுந் தொழில் நிறுவனங்களை நம்பி 80 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.
1998 முதல் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளான சிறு, குறுந் தொழில் துறை, அதிலிருந்து மீண்டு வருவதற்குள் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவை கடும் நெருக்கடிக்குத் தள்ளியது. இந்த பட்ஜெட்டிலாவது தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, மிகவும் அடிப்படையான நான்கு விஷயங்களில் மத்திய அரசு உதவ வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.
இந்திய தொழில்துறை தேக்க நிலையில் தவிப்பதற்குக் காரணம், தேவையான அளவு கடன் கிடைக்கவில்லை என்று உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தனி கடன் கொள்கையை உருவாக்கி, போதுமான அளவுக்கு கடனுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாக தொழிற்பேட்டைகளை உருவாக்க அரசு உதவ வேண்டும். ஸ்டார்ட்அப் திட்டங்களுடன், தொழிற்பேட்டை திட்டங்களையும் அமல்படுத்த வேண்டும்.
தொழில் துறையின் அடித்தட்டில் உள்ள சிறு, குறுந்தொழில்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், வரி விதிப்பு அமைய வேண்டும். குறிப்பாக, மூலப் பொருட்கள் மீதான வரி, இறக்குமதிக்குத்தான் உதவும் வகையில் இருக்கிறது. எனவே, வரி விதிப்புகளை அரசு மறுபரிசீலனை செய்து, ஒவ்வொரு பொருளின் சந்தை விலை, சர்வதேச சந்தை விலையை ஒப்பிட்டு, மாநிலங்களுக்கான தீர்வை மற்றும் வரி விகிதங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.
கட்டுமானத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள தேக்கத்தைப் போக்க, புதிதாக வீடு வாங்குவோருக்கு பல சலுகைகளை அறிவிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் தொழில்துறையின் தேக்க நிலையைப் போக்குவதுடன், வேலைவாய்ப்பை உருவாக்கவும், இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.