Published : 01 Feb 2020 07:43 AM
Last Updated : 01 Feb 2020 07:43 AM

விலங்குகள் ஊடுருவலைக் கட்டுப்படுத்தும் ‘உயிர் வேலி’- பழந்தமிழரின் வேளாண் முறைக்கு உயிர் கொடுத்த விவசாயி

விவசாயி தருமர்

கோவை

விலங்குகள் ஊடுருவலைக் கட்டுப்படுத்தும் வகையில் உயிர்வேலியை அமைத்து, பழந்தமிழரின் வேளாண் முறைக்கு மீண்டும்உயிர் கொடுத்துள்ளார் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி.

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கோவைமாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களை, காட்டுயானைகள், காட்டுப் பன்றிகள், மான்கள் உள்ளிட்டவை பெருமளவு சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, யானைக் கூட்டம் நிலத்தில் புகுந்தால், பல மாதங்கள் பாடுபட்ட வளர்த்த வாழை, கரும்பு, சோளம் போன்றவை ஒரே இரவுக்குள் அழிக்கப்பட்டுவிடும்.

இந்நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மலையடிவாரக் கிராமமான அன்சூர் பகுதியைச் சேர்ந்தவிவசாயி தருமர், தனது தோட்டத்தைச் சுற்றி ‘யானை காத்தான்' என அழைக்கப்படும், நீண்டு வளரும் கள்ளிச்செடி மற்றும் சில தாவரங்கள் மூலம் உயிர் வேலி அமைத்துள்ளார்.

தோட்டத்தைச் சுற்றி ஊசி போன்ற கூர்மையான முட்களுடன், சுவர்போல காட்சியளிக்கும் இந்த இயற்கையான உயிர்வேலியைக் கடந்து யானை உள்ளிட்ட எந்த உயிரினமும் நுழைவதில்லை என கூறுகிறார் தருமர். பழந்தமிழர்கள் தங்களது விளைநிலங்களைச் சுற்றி உயிர்வேலிகளை அமைத்தே பல்லாண்டுகளாய் விவசாயம் செய்து வந்துள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்புவரைகூட தமிழகத்தில் பல இடங்களில் உயிர் வேலிகள் இருந்துள்ளன. ஆனால், பின்னர் ஏற்பட்ட விவசாய முறை மாற்றத்தால், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, பல்லுயிர்ச் சூழல் அழிந்தது.

இலைகளின்றி, தன்னுள் நீரை சேமித்துக்கொண்டு, முட்களுடன் காணப்படும் கள்ளி வகை தாவரத்துடன் அமைக்கப்படும் உயிர்வேலியில் எப்போதும் சற்றே ஈரப்பதம் இருப்பதால், இதைச் சுற்றி நொச்சி, ஆடாதொடை, ஆவாரை போன்ற மூலிகைச் செடி வகைகள், பிரண்டை, கோவக்காய் போன்ற கொடி வகைகள் ஆகியவற்றுடன், எண்ணற்ற புல் பூண்டுகளும், பறவைகளின் எச்சங்களின் உதவியோடு வளர்ந்து, புதர்போல நிறைந்து விடும்.

உயிர்வேலிக்கடியில் கரையான்புற்றுகள், எலி வங்குகள், குருவிக்கூடுகள், பூச்சிகளை கட்டுப்படுத்தும் சிலந்தி வலைகள், வண்டுகளை தேடி வரும் ஓணான்கள், தவளைகள் காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த பாம்புகள்வரும். எனினும், அதன் தேவைகள் வேலியில் கிடைப்பதால், முட்களை கடந்து தோட்டங்களுக்குள் நுழையாது. உயிர் சுழற்சியோடு எப்போதும் உயிர்ப்புடன் காணப்படும் இந்த உயிர்வேலிகளைக் கண்டால், யானைகள் விலகிச் சென்றுவிடும். யானைகள் மட்டுமின்றி, காட்டுப்பன்றிகள், மான்கள், மயில்கள் போன்றவையும் இதைக் கடக்க முயற்சிப்பதில்லை.

நிலத்துக்கு சிறந்த உரமாகவும் இவ்வேலிகள் பயன்படும். இதில் விளைவிக்கப்படும் பயிர்கள், இயற்கையான பல்லுயிர் சூழலோடு பாதுகாப்பாகவும், செழிப்பாகவும் வளர்கின்றன.

இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறும்போது, "உணவுக்காக காட்டைவிட்டு வெளியேறும் விலங்குகளால் ஏற்படும் பயிர், உயிர் சேதங்களைத் தடுக்க கம்பி வேலிகள் அமைப்பதை தவிர்த்து, உயிர்வேலிகளை உருவாக்குவது அவசியம். பாரம்பரிய வழக்கத்தில் இருந்த இந்த உயிர்வேலிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், இவற்றை அமைக்க விவசாயிகளை ஊக்குவிப்போம். இது தொடர்பாக அரசுக்கும் பரிந்துரை செய்யப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x