Last Updated : 01 Feb, 2020 07:10 AM

 

Published : 01 Feb 2020 07:10 AM
Last Updated : 01 Feb 2020 07:10 AM

சென்னை கிங் இன்ஸ்டிடியூட் உட்பட நாடு முழுவதும் 10 இடங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை: மத்திய அரசின் அனுமதியுடன் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை கிங் இன்ஸ்டிடியூட் உட்பட நாடு முழுவதும் 10 மருத்துவ ஆய்வு மையங்களில் கரோனா வைரஸை பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ், சீனா உட்படபல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் பாதிப்புள்ள சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவிஒருவருக்கு கரோனா வைரஸ்பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப் பட்டிருப்பது, இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, கண்காணிப்பையும், தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 10 மருத்துவ ஆய்வு மையங்களில் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி நேற்று கூறியதாவது:

கரோனா வைரஸை கண்டு யாரும் பயப்பட வேண்டாம். பன்றிக் காய்ச்சல் போல, கரோனாவும் ஒரு தொற்றுநோயாகும். நோய்பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை, கோவை,மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் சிறப்பு மருத்துவக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சீனாவில் இருந்து வருபவர்களை தீவிரமாக பரிசோதனை செய்வார்கள். யாருக்காவது காய்ச்சல், இருமல், சளிதொந்தரவு போன்றவை இருந்தால், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அதுபோல 10 சீனர்கள் உட்பட 200-க்கும்மேற்பட்டோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பொது இடங்களுக்கு செல்லக் கூடாது என்றுஅவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பை உறுதிப்படுத்த ரத்த மாதிரிகளை புனேவில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும். கேரளாவில் ஒருவருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் உள்ள 10 மருத்துவ ஆய்வு மையங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதில், தமிழகத்தில் சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிங் இன்ஸ்டிடியூட்டில் போதிய கருவிகளுடன் பணியாளர்களும் உள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் பரிசோதனை தொகுப்பும் கிடைத்துவிடும்.

அதன்பிறகு, கிங் இன்ஸ்டி டியூட்டில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும். சமீபத்தில் சீனாவில் இருந்து வந்த யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் பிரச்சினைகள் இருந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x