

கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கிருந்து தமிழகம் வருபவர்களைக் கண்காணிப்பதாக எழுந்த தகவல் குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் ப்ரியா விளக்கினார்.
கேரளாவில் ஒரு மாணவி ‘கரோனா’ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருக்கிறதா? என்று சென்னை சுகாதாரத்துறை இணை இயக்குனர் சம்பந்தம் மற்றும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் இதுவரை ‘கரோனா’ வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும், சீனாவில் இருந்து வருகிறவர்களை, சுகாதாரத்துறை மருத்துவக்குழுவினர், விமான நிலையத்தில் இருந்தே பரிசோதனை செய்து கண்காணிக்கின்றனர்.
தற்போது கேரளாவில் சீனாவில் இருந்து வந்தஒரு மாணவிக்கு ‘கரோனா’ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்கு திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் அதுபோன்ற சூழல் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ‘கரோனா’ வைரஸ் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டுகளை சென்னையில் இருந்து சுகாதாரத்துறையை சேர்ந்த தனிக்குழு ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த கொள்ளை நோய் தடுப்பு இணை இயக்குனர் டாக்டர் சம்பந்தம், மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ப்ரியா மற்றும் அதிகாரிகள் குழு மதுரை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ‘கரோனா’ வைரஸ் சிறப்பு வார்டை ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா கூறுகையில், ‘‘கேரளாவில் இருந்து வருகிறவர்களை இதுவரை கண்காணிக்கவும், மருத்துவப் பரிசோதனை செய்யவும் எந்த உத்தரவும் வரவில்லை. கேரளாவில் பாதிக்கப்பட்ட மாணவி, சீனாவில் இருந்து வந்தவர். அவரை விமானநிலையத்திலேயே கண்காணித்து தற்போது அரசு மருத்துவமனையில் தனிப்படுத்திவிட்டனர். அதனால், அவர் மூலம் கேரளாவில் உள்ளவர்களுக்கு அந்த நோய் பரவ வாய்ப்பில்லை. எனவே, சீனாவில் இருந்து வருகிறவர்களைதான் நாங்கள் தொடர்ந்து பரிசோதனை செய்யவும், கண்காணிக்கவும் செய்கிறோம், ’’ என்றார்.