

நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று தென்காசியில் நடைபெற்ற மாவட்ட குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுப்பராஜா திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணபிள்ளை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
சங்கரன்கோவிலில் நடந்த மாநில அளவிலான மனிதநேர வார நிறைவு விழாவுக்கு ஆட்சியர் சென்றிருந்ததால், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள இயலவில்லை. இந்நிலையில், கூட்டம் தொடங்கியதும் ஆட்சியர் வராததால் மாவட்ட வருவாய் அலுவலரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சமாதானப்படுத்தினார். அதன் பின்னர், கூட்டம் தொடர்ந்து நடந்தது. கடந்த கூட்டத்தில் விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கூறியதாவது:
தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ஒரு கிலோ சன்னரக நெல்லுக்கு ரூ.19.05, மோட்டா ரக நெல்லுக்கு ரூ.18.65 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓர் ஏக்கர் நெல் சாகுபடி செய்ய ரூ.25 ஆயிரம் செலவாகிறது. பூச்சிகள் தாக்குததால் அதிக இழப்பு ஏற்படுகிறது. அண்டை மாநிலமாக கேரளாவில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,550 வழங்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்திலும் ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.25 வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், “இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்படும். விலை நிர்ணயம் தொடர்பாக அரசு தான் முடிவு செய்யும்” என்றனர். பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மனுக்களை அளித்தனர்.
விவசாயி வேலுமயில் அளித்த மனுவில், ‘கடையநல்லூர், ஆய்க்குடியில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட உளுந்து தொடர் மழையால் சேதம் அடைந்தன. 3 நாட்கள் மட்டுமே அவகாசம் அளித்ததால் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் போய்விட்டது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து கணக்கெடுப்பு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
விவசாயி கருப்பசாமி அளித்த மனுவில், ‘குருவிகுளம், சங்கரன்கோவில், மேலநீலதநல்லூர் ஒன்றியங்களில் மானாவாரி குளங்கள் கடந்த 10 ஆண்டுகளாக நிரம்பவில்லை. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரை மானாவாரி குளங்களுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
விவசாயி சேக்மைதீன் அளித்துள்ள மனுவில், ‘நெல் அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு வாடகை ரூ.2,500 முதல் 3,000 வரை ஆகிறது. இதனால், விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு ஜெர்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கை அறுவடை இயந்திரங்களை மானியத்துடன் வழங்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடனை வசூலிக்க கந்துவட்டிக்காரர்களை விட கொடூரமான முறையில் நடந்துகொள்கின்றன. இதனால், பல பெண்கள் அவமானம் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
விவசாயி ராதாகிருஷ்ணன் அளித்துள்ள மனுவில், ‘சங்கரன்கோவில் தாலுகாவில் மல்லி, பிச்சி, சம்பங்கி என பல வகையான மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். சங்கரன்கோவிலில் 40க்கும் மேற்பட்ட மலர் ஏலக்கடைகள் உள்ளன. அங்கு கை தராசு மூலம் எடை போடுகின்றனர். இதனால், எடை மோசடி நடக்கிறது. இதைத் தடுக்க கணினி தராசு மூலம் மலர்களை எடைபோட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
விவசாயி செல்லத்துரை அளித்துள்ள மனுவில், ‘நெல் அறுவடை இயந்திரங்களுக்கு அதிக வாடகை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அறுவடை இயந்திர உரிமையாளர்களுடன் பேசி, நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
விவசாயி சுப்பிரமணியன் அளித்துள்ள மனுவில், ‘செங்கோட்டை வட்டம், நெடுவயல் கிராமம், வீர வெண்பாமாலை கால்வாய் கரையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக பல முறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், விளைபொருட்களை வெளியே கொண்டுவர முடியவில்லை. உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
விவசாயி மாடசாமி அளித்துள்ள மனுவில், ‘ஊத்துமலை கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லையால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. விவசாய நிலங்களைச் சுற்றி வேலி அமைக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.