மத்திய பல்கலை.யில் இட ஒதுக்கீடில்லை: தனி இயக்கம் தொடங்கி நிர்வாகக் கட்டிடத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

மத்திய பல்கலை.யில் இட ஒதுக்கீடில்லை: தனி இயக்கம் தொடங்கி நிர்வாகக் கட்டிடத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்
Updated on
1 min read

மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் சூழலில், அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாததால் மாணவர்களே தனியாக அமைப்பு தாடங்கி பல்கலை நிர்வாகக் கட்டிடத்தை முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி பல்கலைக்கழகம் கடந்த 1985-ல் தொடங்கப்பட்டபோது நிலம் கொடுத்தோர் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தோர் படிக்க 25 சதவீத இட ஒதுக்கீடு கோரப்பட்டது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 66-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 18 பாடப்பிரிவுகளில் மட்டுமே புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதம் ஒதுக்கீடு கோரி போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. கடந்த கல்வியாண்டுக்கான அறிவிப்பிலும் இடஒதுக்கீடு இல்லை. இதற்கிடையே புதுச்சேரியில் ஆண்டுதோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயர் கல்வி வாய்ப்பை பெறக் காத்திருக்கின்றனர். இதை அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாத சூழல் நிலவிய நிலையில் மாணவ, மாணவிகளே தற்போது தனியாக இயக்கம் தொடங்கியுள்ளனர்.

சுதேசி மாணவர்களின் கல்வி உரிமைகள் (இ.ஆர்.ஐ.பி) என்ற அமைப்பின் மூலம் இன்று ஏராளமான மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தை முற்றுகையிட்டனர்.

இதன் விளைவாக நிர்வாகப் பிரதிநிதியான கல்வி இயக்குநர் பாலகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக ஆலோசிப்பதாகக் குறிப்பிட்டுச் சென்றார். சரியான பதில் கிடைக்காததால் அடுத்தகட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து புதுச்சேரியைச் சேர்ந்த மாணவ, மாணவிககள் கூறுகையில், "புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மரில் 27 சத இடஒதுக்கீடு புதுச்சேரி மாணவர்களுக்கு தரப்படுகிறது. ஆனால் மத்திய பல்கலைக்கழகம் புதுச்சேரியைச் சேர்ந்தோரை நிராகரிக்கிறது. பல்கலைக்கழகத்தில் 66 பாடப்பிரிவுகளில் 18 பாடப்பிரிவுகளில் மட்டுமே இட ஒதுக்கீடு தரப்படுகிறது. குறிப்பாக வேலைவாய்ப்பு உள்ள பாடப்பிரிவுகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்படுவதில்லை. பல்கலைக்கழக நிர்வாகக் குழு கூட்டத்திலேயே இடஒதுக்கீட்டை முடிவு செய்து அறிவிக்கலாம். ஆனால், மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என்கிறனர்.

எங்களைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கின்றனர். மாநில அரசு தேர்தல் வாக்குறுதியில் 25 சத இடஒதுக்கீடு பெற்று தருவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் செய்யவில்லை. புதுச்சேரியில் உள்ள இரு எம்.பி.க்களும் மத்திய அரசை வலியுறுத்தவில்லை. தற்போது ஜிப்மரை விட புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கட்டணம் அதிகம். பல போராட்டங்கள் நடத்தியும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தரப்புகள் எங்களை கண்டுகொள்ளவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு துணை வேந்தரால் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டி ஒப்புதல் கடிதம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆறு வருடங்கள் ஆகியும் அதற்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை" என்று குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in