Published : 31 Jan 2020 05:22 PM
Last Updated : 31 Jan 2020 05:22 PM

இனி எவ்வித முறைகேடும் நடக்காமல் கவனிக்கப்படும்; தேர்வு எழுதுபவர்களும் நேர்மையுடன் இருக்கவேண்டும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தேர்வு எழுதும் தேர்வர்கள், பல்வேறு ஊடகங்களில் ஊகங்களின் அடிப்படையில் வரும் செய்திகளைக் கண்டு அச்சம் அடையாமல் தேர்வாணையத்தின் ஒளிவுமறைவற்ற நடவடிக்கைகள் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ள சில தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் கடந்த சில நாட்களாக பல்வேறு ஊகங்கள் இடமளிக்கும் வகையில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

* 2019-ம் ஆண்டு குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்ற செய்தி சமூக வலைதளங்கள் வாயிலாக அறியப்பட்ட உடன் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு தாமாக முன்வந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதியாக முடிவெடுத்து செயலர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு அறிவுறுத்தியது.

இதையடுத்து பல ஆய்வுப் பணிகள், ஆவணங்கள் ஆய்வு, நேரடி விசாரணை மூலம் தவறுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் மேல் விசாரணைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த தேர்வர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

* இதைத் தொடர்ந்து 2017-ல் நடைபெற்ற குரூப்-2 பணிகளுக்கான தேர்வில் தவறு நடந்துள்ளது என சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்துள்ள செய்திகளை தலைவர், உறுப்பினர்கள் உள்ளடங்கிய தேர்வாணையக் குடும்பம் கவனத்துடன் ஆராய்ந்து தவறுகள் நடந்திருக்கலாம் என சந்தேகப்படுவதால் இத்தேர்வு குறித்து விரிவான குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உரிய ஆவணங்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது.

* மேலும் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் குரூப்-4 மற்றும் குரூப்-2 குரூப்-2 வைத் தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்விலும் தவறு நடந்திருப்பது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வைப் பொறுத்தவரை முன் அனுபவச் சான்றிதழ் சரிபார்ப்பு போக்குவரத்துறை மூலமாக செய்யப்பட்ட துறை அளித்த விவரங்களின் அடிப்படையில் 33 விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தற்போது உயர் நீதிமன்றம் தனது ஆணையில் போக்குவரத்து துறை நடத்திய முன்னுரிமை சான்றிதழ் சரிபார்ப்பில் தவறு நிகழ்ந்துள்ளதாகக் கூறி இப்பணியை முழுவதும் மறு ஆய்வு செய்ய போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகள் குறித்த எவ்வித ஐயப்பாடும் எழுப்பப்படவில்லை.

* இதுபோலவே தற்போது நடந்து முடிந்துள்ள ஒருங்கிணைந்த பொறியாளர் பணி தேர்வு முடிவுகளில் அடுத்தடுத்த பதிவுகளில் கொண்ட தேர்வர்கள் தஞ்சாவூர் தேர்வு மையத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்தும் தேர்வாணையம் தீவிர ஆய்வு மேற்கொண்டது.

இச்செய்திகளில் வெளிவந்துள்ள பதிவுகள் அனைத்தும் வேளாண் பொறியாளர் தேர்வு ஆகும். இதில் அரசு விதிகளின்படி இளநிலை பொறியாளர் வேளாண் பொறியியல் துறை வேளாண் பொறியியல் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை பதவியாகும். வேளாண் பொறியியல் படித்த தகுதியானவர்கள் இல்லாத பட்சத்தில் மட்டுமே இதர பொறியியல் படித்த மாணவர்களுக்கு இப்பணியில் இடம் அளிக்கப்படும்.

ஆகையால் தேர்வு முடிவுகளில் மற்ற பொறியியல் படிப்பு படித்த தேர்வர்களைக் காட்டிலும் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் வேளாண் பொறியியல் பட்டம் பெற்ற தேர்வில் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். இதில் எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இதுமட்டுமல்லாமல் 2019-ல் நடைபெற்ற குரூப்-1 தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ள தேர்வர்களின் தேர்வு குறித்து சமூக ஊடகம் இறுதியாகத் தேர்வு பெற்ற 181 தேர்வர்கள் 150 பேர் ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி ஊடகங்களில் பல்வேறு ஊகங்களுக்கு இடம் அளிக்கும் வகையிலும் தேர்வைக் குலைக்கும் வகையிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இச்சந்தேகங்களையும் தேர்வாணையம் கவனமுடன் ஆராய்ந்து தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்தபின் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என உறுதிபடத் தெரியவருகிறது. தேர்வு முடிவில் வெளிவந்த ஒரு வார காலத்திற்குள் பல்வேறு பயிற்சி மையங்கள் நாளிதழ்களில் தங்கள் மையங்களிலிருந்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தேர்வர் எண்ணிக்கை முந்நூறைத் தாண்டும். இவ்வாறாக பயிற்சி மையங்கள் அளிக்கும் விளம்பரங்களில் ஒரே தேர்வரை ஒன்றுக்கு மேற்பட்ட பயிற்சி மையங்கள் உரிமை கோரும் போக்கு உள்ளது.

* மேற்கூறிய இனங்கள் அனைத்தும் முறையான புகார்கள் எதுவும் பெறாமலேயே ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேர்வு வாரியம் விசாரணை செய்து தகுந்த முகாந்திரம் இருக்கும் இடங்களில் உரிய விசாரணைக்கு ஆவன செய்துள்ளது. இனிவரும் காலங்களில் குறிப்பிட்ட புகார்கள் செய்திகள் தேர்வாணையத்தின் கவனத்திற்கு வரும்போது அது எவ்வளவு சிறியதாக இருப்பினும் தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதுடன் வெளிப்படையான ஆய்வுகள் மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் தேர்வாணையம் உறுதியாக உள்ளது.

* தேர்வர்களும் தங்கள் சமூகப் பொறுப்புணர்வு நேர்மையான வழிகளில் மட்டும் தேர்வினை எதிர்கொள்ளுமாறும், எவ்வித முறைகேடுகளும் துணை போகாமல் இருக்கும்படியும், இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்றும் இது குறித்த தகவல் தெரிய வரும்போது தேர்வாணையத்தின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* பல்வேறு ஊடகங்களில் ஊகங்களின் அடிப்படையில் வரும் செய்திகளைக் கண்டு அச்சம் அடையாமல் தேர்வாணையத்தின் ஒளிவுமறைவற்ற நடவடிக்கைகள் மீது முழுநம்பிக்கை வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் மட்டுமின்றி வேறு எந்தத் தவறும் நிகழாவண்ணம் இருக்க தகுந்த சீர்திருத்த நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும்”.

இவ்வாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x