கரோனோ வைரஸ் அச்சம் வேண்டாம்; தயார் நிலையில் தமிழக அரசு: சுகாதாரத் துறை இணை இயக்குனர் சம்பத் பேட்டி

கரோனோ வைரஸ் அச்சம் வேண்டாம்; தயார் நிலையில் தமிழக அரசு: சுகாதாரத் துறை இணை இயக்குனர் சம்பத் பேட்டி
Updated on
1 min read

"தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனவே மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். தமிழக சுகாதாரத்துறை மூலம் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன" என மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத் துறை இணை இயக்குனர் சம்பத் தெரிவித்தார்.

உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் குறித்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை திருச்சி, மதுரை உட்பட பல்வேறு விமான நிலையங்களிலும் சீனாவிலிருந்து வரும் பயணிகள் மற்றும் பிற நாடுகளிலிருந்து பிற மாநிலத்திலிருந்து வரும் பயணிகளுக்கு தமிழக அரசின் சுகாதாரத் துறை மூலம் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது..

அந்த வகையில் மதுரை விமான நிலையத்தில் கரோனா வைரஸ் குறித்து சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் கரோனா வைரஸ் குறித்து பயணிகளிடம் பரிசோதனை செய்வதற்காக தமிழக அரசின் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் சம்பத் தலைமையில் துணை இயக்குனர் பிரியா ராஜ் மற்றும் சில அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் செல்லும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என ஆய்வு செய்தனர்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் சம்பத், "கடந்த 10 நாட்களாக சீனாவில் கரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கம் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 160 பேர் இறந்துள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் சென்னை மதுரை கோவை திருச்சி உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் தமிழக அரசின் தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் சுகாதாரத்துறை மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

இதுவரை சீனாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு 25 பயணிகள் வந்துள்ளார்கள் அவர்களிடம் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அந்த வகையில் அவர்களிடம் இதுவரை எந்த வைரஸ் அறிகுறியும் இல்லை.

மேலும் அவர்களின் வீடுகளுக்குச் சென்று தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

மேலும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்த வகையான வைரஸ் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம். இது பரவாமல் தடுக்க தமிழக அரசின் சுகாதாரத்துறை மூலம் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in