Last Updated : 31 Jan, 2020 04:36 PM

 

Published : 31 Jan 2020 04:36 PM
Last Updated : 31 Jan 2020 04:36 PM

நெல்லை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் காய்ச்சல் வார்டு திறப்பு: 24 மணிநேரமும் சிறப்பு மருத்துவக் குழு பணியில் இருக்கும்

திருநெல்வேலி

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.

இங்கு 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவ குழு கண்காணிப்பில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த வைரஸ் தொற்று குறித்த அச்சம் உலகம் முழுக்க ஏற்பட்டிருக்கிறது.

பல்வேறு நாடுகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கேரளத்தைச் சேர்ந்த மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் விழிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் ஒவ்வொரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தேவையான உபகரணங்கள், மருந்துப் பொருட்களுடன் சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருநெல்வேலியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் காய்ச்சல் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் கூறியதாவது:

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் பெரியவர்களுக்கு 12, சிறியவர்களுக்கு 2 படுக்கை வசதிகளும், செயற்கை சுவாசம் அளிக்கும் வெண்டிலேட்டர், போதுமான ஆக்ஸிஜன், முக கவசங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் தேவையான மருந்துகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.

இங்கு 24 மணிநேரமும் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அளிக்க ஏதுவாக 3 மருத்துவர்கள் குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவர் குழுவில் சிறப்பு மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது வரையில் கரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்கும் யாருக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.

தொடர் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், தொண்டை வலி, மிகுந்த உடல்வலி, உடல் சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு, குளிர், நடுக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை உடனே அணுக வேண்டும். தும்மல், இருமல், சுகாதாரமற்ற கைகளால் தொடுதல் போன்றவற்றால் இந்த வைரஸ் காய்ச்சல் பரவும். இந்த வைரஸ் பரவாமல் காத்துக்கொள்ள, அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கண், வாய், மூக்கு போன்ற பகுதிகளை அசுத்தமான கைகளோடு தொடாமல் இருக்க வேண்டும்.

காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுக்க வேண்டும். கரோனா வைரஸ் காய்ச்சல் காலங்களில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x