

சீனாவில் இருந்து திருவண்ணாமலை திரும்பிய இளைஞருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் உருவான கரோனா வைரஸ், இந்தியா உட்பட 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. சீனாவில் இருந்து நாடு திரும்பிய கேரள மாணவிக்கு, கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து தமிழகம் திரும்பியவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்க தமிழக சுகாதாரத் துறை மூலம் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சீனாவில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு திரும்பிய 5 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் ஒருவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (ஜன.31) அனுமதிக்கப்பட்டார்.
திருவண்ணாமலை நகரில் வசிக்கும் 28 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவர் சீனாவில் பணியாற்றுகிறார். அவர், அங்கிருந்து கடந்த மாதம் 19-ம் தேதி நாடு திரும்பி உள்ளார். அவருக்கு சளி, இரும்பல் போன்ற பாதிப்பு இருந்ததால், சுகாதாரத் துறை அறிவுரையின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை இணை பேராசிரியர் நா.கலைசெழியன் கூறும்போது, "கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 1,000 கி.மீ., தொலைவில் உள்ள ஷான்காய் நகரில் வசித்த 28 வயது இளைஞர், கடந்த 19-ம் தேதி நாடு திரும்பி உள்ளார். சீனாவில் கரோனா வைரஸ் தீவிரம் அடைவதற்கு முன்பே, நாடு திரும்பி விட்டார். அவருக்கு திடீரென சளி, இரும்பல், தும்பல் போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் நாடு திரும்பும்போது, உடல்நிலை பாதிக்கப்பட்டால் தொடர்பு கொள்ள அவசர உதவி மையத்தின் தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
உதவி மையத்தின் அறிவுரையின்பேரில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, முதற்கட்ட ஆய்வு செய்யப்பட்டதில், எந்த விதமான நோயின் அறிகுறியும் தெரியவில்லை. மேலும் கரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு ரத்த மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு 2 அல்லது 3 நாட்களில் தெரியவரும்.
பயப்பட வேண்டாம்
தற்போது வரை, அந்த இளைஞர் நன்றாக உள்ளார். பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். அவரை, அவரது குடும்பத்தினர் சந்திக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பிரத்யேக முக கவசம் வழங்கப்பட்டுள்ளது. நாங்களும் அதனை பயன்படுத்துகிறோம். கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி தென்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக பிரிவு அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.