வெளிநடப்பு செய்த விவசாயிகள்
வெளிநடப்பு செய்த விவசாயிகள்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: தஞ்சாவூரில் குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

Published on

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று (ஜன.31), வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலர், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து கூட்ட அரங்கத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வைத்த தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன் தெரிவித்ததாவது:

"காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். சுற்றுச்சூழலை பற்றி கவலைப்படாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால் காவிரி டெல்டா பாலைவனமாகும் சூழல் ஏற்படும். எனவே காவிரி டெல்டாவை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் குரலை மதிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது மிகப் பெரிய போராட்டமாக மாறும். அதற்கு முதல்கட்டமாக இந்த வெளிநடப்பு நடத்தப்பட்டுள்ளது" என்றார் கண்ணன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in