குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்

குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்
Updated on
1 min read

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை வழக்கறிஞர் ஐ.முகமது ரஸ்வி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் கடந்த ஆண்டில் டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 5575 மையங்களில் 16 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றிப்பெற்றது தெரியவந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டபோது குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதியானது. முறைகேடு செய்து வெற்றிப்பெற்றதாக 99 பேர் வாழ்நாள் தகுதியிழப்பு செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிபிசிஐடியிடம் டிஎன்பிஎஸ்சி புகார் அளித்தது. சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து குரூப் 4 முறைகேடு வழக்கை விசாரிக்கத் தனிப்படை அமைத்துள்ளது. இந்த தனிப்படை பலரை கைது செய்துள்ளது.

குரூப் 4 முறைகேட்டில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. சிபிஐ விசாரித்தால் தான் முறைகேடு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டுவர முடியும்.

எனவே வருங்காலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையங்களை கண்காணிக்க அரசு தனிக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.

குரூப் 4 பணியிடங்களுக்கு மறு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி தலைவருக்கு உத்தரவிட வேண்டும், குரூப் 4 முறைகேட்டில் அனைத்து உண்மைகளைக் கண்டறியவும், நியாயமாக விசாரணை நடைபெறவும் சிபிசிஐடி போலீஸார் வசமுள்ள வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் கே.நிலமேகம், பி.சந்தானகிருஷ்ணன் வாதிட்டனர்.

பின்னர் சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பவும், மனு தொடர்பாக சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in