

கரோனா வைரஸ் தாக்கமுள்ள சீனாவிலிருந்து தமிழர்களை மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவி வருவதால் சீனாவில் இருக்கும் தமிழர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வரவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மத்திய யூனியன் இளைஞர் பிரிவு செயலர் எம்.சமயசெல்வம் தாக்கல் செய்த மனுவில்,
தமிழகத்தில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளதால் ஏராளமானோர் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, சீனா, ஓமன் போன்ற நாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர்.
இவர்கள் வெளிநாடுகளில் பல்வேறு பணிகளில் உள்ளனர். தற்போது, சீனாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. கரோனா வைரஸ் தாக்குதலுக்கு 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் பணிபுரியும் வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்கு திரும்பலாம் என சீனா அரசு தெரிவித்துள்ளது. எனவே சீனாவில் பணிபுரியும் தமிழர்கள் பத்திரமாக தமிழகம் திரும்பவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 18-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.