

கரூர் மாவட்டத்தில் உள்ள திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜியின் இல்லம், அவரது தம்பியின் இல்லம் மற்றும் நிறுவனத்தில் சென்னை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அதிமுக ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அதிமுகவில் இருந்து விலகிய அவர், தற்போது கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராகவும் அரவக்குறிச்சி எம்எல்ஏவாகவும் உள்ளார்.
இந்நிலையில், இவர் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த சென்னை சிட்டி க்ரைம் போலீஸார், கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லம், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது தம்பி வீடுகளில் இன்று (ஜன.31) காலையில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சோதனை நடைபெறும் தகவல் கசிந்ததையடுத்து. ராமேஸ்வரபட்டி இல்லத்தின் முன்பு திமுகவினர் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
மேலும், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜி தம்பி அசோக்குக்கு சொந்தமான நிறுவனத்தில் போலீஸார் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் திரண்டு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
பக்கத்து இல்லம் வழியாக நிறுவனத்திற்குள் நுழைய முயன்ற போலீஸாரை திமுகவினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸாரை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.