

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையார் சந்நிதியின் 216 அடி கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட விமான கலசம் நேற்று மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா வரும் பிப்.5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், பெருவுடையார் சந்நிதியின் கருவறையில் 216 அடி உயர கோபுரத்தில் உள்ள விமானத்தின் மீது இருந்த 12 அடி உயர கலசம் புனரமைப்பு செய்வதற்காக கடந்த ஜன.5-ம் தேதி கீழே இறக்கப்பட்டது.
இதேபோல பெரியநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், வாராஹி, சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னதிகளின் கோபுர கலசங்களும் இறக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த ஸ்தபதி செல்வராஜ் தலைமையிலான குழுவினர் புளி, சீயக்காய் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு கலசத்தை சுத்தம் செய்தனர். இதையடுத்து, தங்க மூலாம் பூசப்பட்டது. இதில் 25 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கலசத்தின் நிலை குறித்து கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கதிரியக்கப் பிரிவின் தலைவர் விஞ்ஞானி வெங்கட்ராமன், சென்னை ஐஐடி உலோகவியல் துறை பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் தினமும் ஆய்வு செய்தனர்.
தங்க முலாம் பூசும் பணி கடந்த 2 வாரமாக நடைபெற்று நிறைவடைந்த நிலையில், சிவாச்சாரியார்கள், ஓதுவார்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஊழியர்கள் மூலமாக கயிறு கட்டி, 12 அடி உயரமுள்ள கலசத்தின் மகாபத்மா, ஆரடா, மகாகுடம், சிறிய ஆரடா, மலர், குமிழ் ஆகிய 6 பாகங்களும் கோபுர உச்சிக்கு ஏற்றும் பணி நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, 6 மணி நேரத்துக்குப் பிறகு கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கலசம் 225 கிலோ வரகு கொண்டு நிரப்பட்டது. பிரதிஷ்டை செய்த பிறகு 7 சிவாச்சாரியார்கள் கலசத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் ஓதுவார்களால் மந்திரம் ஓதப்பட்டது.
கலசம் ஏற்றுவதை திரளான பக்தர்கள் பார்த்ததுடன், சிறப்பு பூஜையின்போது வழிபட்டனர்.
இதேபோன்று பெரியநாயகி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், வாராஹி, சண்டிகேஸ்வரர் சந்நிதிகளில் இன்று (ஜன.31) கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து ஸ்தபதி செல்வராஜ் கூறியதாவது: பெருவுடையார் கலசத்துக்கு மட்டும் 190 கிராம் தங்கம் பயன்படுத்தி மூலாம் பூசப்பட்டது. இதையடுத்து முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. கலசம் கீழே விழாமல் இருக்க, துருப்பிடிக்காத திருகுகள் அமைக்கப்பட்டுஉள்ளன. மற்ற 6 சந்நிதிகளின் கலசங்களுக்கும் 144 கிராம் தங்கம் என மொத்தம் 334 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.