Published : 31 Jan 2020 08:00 AM
Last Updated : 31 Jan 2020 08:00 AM

பாஜக நிர்வாகி கொலையில் மேலும் 3 பேர் கைது

திருச்சியில் பாஜக மண்டல செயலாளர் விஜயரகு கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைதாகியுள்ளனர்.

திருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளர் விஜயரகு(38), கடந்த 27-ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக விஜயரகுவின் தம்பி செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் முகம்மது உசேன் என்பவரது மகன் மிட்டாய் பாபு என்ற பாபு(25) உள்ளிட்டோரை போலீஸார் தேடி வந்தனர்.

மிட்டாய் பாபு உட்பட 2 பேரை போலீஸார் சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்து, காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்ததுடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை பூக்கடை பகுதியில் தலைமறைவாக இருந்த மிட்டாய் பாபு என்ற பாபு, தாராநல்லூர் அலங்கநாதபுரம் மோகன் மகன் மாஸ் ஹரி என்ற ஹரிபிரசாத்(20) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு திருச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

கொலை சதிக்கு உடந்தையாக இருந்த இபி ரோடு அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் சுடர்வேந்தன் (19), சச்சின் என்ற சஞ்சய் சச்சின்(19), அரியமங்கலம் காமராஜர் நகரைச் சேர்ந்த முகம்மது யூசுப் மகன் யாசர் என்ற முகம்மது யாசர்(19) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டாக விஜயரகு, இவரது உறவினர் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கும், மிட்டாய் பாபுவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களின் தொடர்ச்சியாகவே கொலை நடந்துள்ளது. இதற்கு தனிப்பட்ட முன்விரோதமே காரணம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x