

எஸ்.ஐ., வில்சனை கொலை செய்தபோது அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் அணிந்திருந்த ஆடைகளை நேற்று கேரள மாநிலம் வடகராவில் தனிப்படை போலீஸார் மீட்டனர். மேலும் உருவத்தை மாற்றுவதற்காக இருவரும் சிகை அலங்காரம் செய்த சலூன் கடைக்காரரிடமும் விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோரை 10 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் மீட்பு
நேற்று முன்தினம் இரவு இவர்களிடம் நடத்திய விசாரணையின்போது, வில்சனை கொலை செய்த பின்னர் கோழிக்கோடுக்கு தப்பி வந்து, வடகராவில் உள்ள கடை ஒன்றில் புதிய ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டு, கொலை செய்தபோது உடுத்தியிருந்த ஆடைகளை அங்குள்ள பள்ளிவாசல் அருகே வீசியதாகவும், பின்னர், பள்ளிவாசலில் தொழுகை நடத்தியதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் டிஎஸ்பி கணேசன் தலைமையில் எஸ்.ஐ. மோகன ஐயர் மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படையினர், தீவிரவாதிகள் இருவரையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றனர். எஸ்.ஐ. வில்சனை கொலை செய்தபோது தாங்கள் அணிந்திருந்த பேன்ட், சட்டைகளை வடகராவில் உள்ள சிறிய பள்ளிவாசல் அருகே குப்பைகளை கொட்டும் பகுதியில், வீசிய இடத்தை இருவரும் அடையாளம் காட்டினர். அங்கிருந்து ஆடைகளை போலீஸார் கைப்பற்றினர்.
மேலும், தங்களது தோற்றத்தை மாற்றுவதற்காக வடகராவை அடுத்த பையோளி என்னும் இடத்தில் அமைந்துள்ள சலூன் கடைக்கு சென்றதாகவும், அங்கு அப்துல் ஷமீம் தனது தலை முடியை மொட்டை போட்டதுபோல் அதிக அளவு வெட்டியுள்ளதும், தவுபீக் அதிக முடி இருப்பதுபோல் சிகையலங்காரம் செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இதை உறுதிப்படுத்துவதற்காக குறிப்பிட்ட சலூன் கடைக்காரரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், இருவரையும் அழைத்துக்கொண்டு மீண்டும் போலீஸார் நாகர்கோவில் திரும்பினர். அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
இருவரது போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதால், இருவரும் இன்று மாலை 4 மணிக்கு, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அப்போது கொலை தொடர்பாக இருவரும் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய ஆவணங்கள், ஆதாரங்களை போலீஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.